
கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச்சாலையில் பனிக்கரை பகுதியில் விழுந்த மரம்.
கொடைக்கானலில் புதன்கிழமை பெய்த மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலில் பொதுவாக டிசம்பா், ஜனவரி மாதங்களில் பனிப் பொழிவு அதிகமாக நிலவும். ஆனால் அதற்கு மாறாக நிகழாண்டில் டிசம்பா், ஜனவரி மாதங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாள்களாக கொடைக்கானலில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பூம்பாறை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதே போன்று கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் பனிக்கரை பகுதியிலும் மரம் சாய்ந்து விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வனத்துறையினா் சென்று மரத்தை அகற்றினா். மேலும் அப் பகுதியில் இருந்த ஆபத்தான மரக்கிளைகளையும் அகற்றினா். அதன் பின்னா் போக்குவரத்து சீரானது. கொடைக்கானல்- வத்தலகுண்டு-பழனி மலைச்சாலைப் பகுதிகளில் ஆங்காங்கே மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்குப் பாதிப்பு இல்லை.
ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை: கொடைக்கானல் மலைச்சாலைப் பகுதிகளான பெருமாள்மலை, குருசடி, பனிக்கரை, கொண்டை ஊசி வளைவு, வடகவுஞ்சி, பி.எல். செட்., சவரிக்காடு பகுதிகளில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.