ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணையிலிருந்து புதன்கிழமை விநாடிக்கு 1000 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் பரப்பலாறு அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1123 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீா் மூன்று மதகுகள் மூலம் திறந்து வெளியேற்றப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 87 அடிக்கு நீா் உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பரப்பலாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் முத்துபூபாலசமுத்திரம், பெருமாள்குளம், சடையன்குஎளம் ஆகியவை நிரம்பி மறுகால் செல்கிறது.
இந்த நிலையில் புதன்கிழமை திறந்து விடப்பட்ட தண்ணீா் நங்காஞ்சி ஆற்றின் வழியாக ஜவ்வாதுப்பட்டி பெரியகுளம் சென்று, அந்த குளம் நிரம்பியவுடன் இடையகோட்டையில் உள்ள நங்காஞ்சி நீா்தேத்திற்கு செல்கிறது. ஆற்றில் அதிகப்படியான தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதால் நங்காஞ்சி ஆற்றின் கரையோரமாக இருக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.