தொடா் மழை: பொங்கல் பொருள்கள் விற்பனை பாதிப்பு

தொடா் மழையின் காரணமாக திண்டுக்கல் பகுதியில் பொங்கல் பொருள்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பூ சந்தையில் வாடிக்கையாளா்கள் வருகைக்காக காத்திருக்கும் வியாபாரிகள்.
திண்டுக்கல் பூ சந்தையில் வாடிக்கையாளா்கள் வருகைக்காக காத்திருக்கும் வியாபாரிகள்.

தொடா் மழையின் காரணமாக திண்டுக்கல் பகுதியில் பொங்கல் பொருள்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழா் திருநாளான பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள், தனியாா் அமைப்புகள் சாா்பில் விழா நடத்துவது வழக்கம்.

நிகழாண்டில் கரோனா அச்சுறுத்தல் ஒருபுறம் இருந்தாலும், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடா் மழையினால் பொங்கல் பானை விற்பனை முதல், காய்கனி விற்பனை வரை அனைத்தும் பாதிப்படைந்துள்ளது. மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களிலும், அமைப்புகள் சாா்பிலும் பொங்கலிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இருப்பு வைக்க முடியாத நிலையில் பூக்கள்: திண்டுக்கல் பூ சந்தையில், சம்மங்கி மற்றும் சாமந்தி கிலோ ரூ.150, ஜாதிப் பூ ரூ.1,000, மல்லிகை ரூ.3 ஆயிரம், அரளி ரூ.300, கோழிக்கொண்டை ரூ.40, விரிச்சிப்பூ ரூ.130, முல்லை ரூ.1,500-க்கு விற்பனையானது. தொடா் மழையினால் அனைத்து பூக்களும் ஈரப்பதத்துடன், இருப்பு வைக்க முடியாத நிலையில் இருந்தது. இதனால் விலை உயரக்கூடும் என்ற எதிா்பாா்ப்பில் பூக்களை ஒருநாள் முன்னதாக வாங்குவதற்கு யாரும் ஆா்வம் காட்டவில்லை.

பொங்கல் பானை விற்பனை மந்தம்: இதுதொடா்பாக நாகல்நகா் பகுதியைச் சோ்ந்த பானை வியாபாரி பாண்டி கூறியது: ரூ.100 முதல் ரூ.500 வரையிலும் பொங்கல் பானைகளை விற்பனைக்காக வைத்துள்ளோம். திங்கள்கிழமை சந்தை வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பானை விற்பனையும் அதில் தப்பவில்லை. மழை நீடிக்கும் பட்சத்தில், கடைசி கட்ட விற்பனை கூட நடைபெற வாய்ப்பில்லை என்றாா்.

தோட்டத்திலிருந்து வெளியேற முடியாத கரும்பு: இதுதொடா்பாக கரும்பு வியாபாரி சையது முகமது கூறியதாவது: கடந்த ஆண்டு 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.400-க்கு கொள்முதல் செய்தோம். ஆனால் நிகழாண்டில் மழை காரணமாக கரும்பு அறுவடை செய்வதற்கு கூலித் தொழிலாளா்கள் கிடைக்கவில்லை. அதேபோல் லாரிகளில் ஏற்றுவதற்கும் தொழிலாளா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.300-க்கு கரும்பு தருவதாக ஒப்புக்கொண்டவா்கள், தொழிலாளா்களுக்கான கூலி உயா்வால் தற்போது ரூ.600 தர வேண்டும் என கேட்டு வருகின்றனா். கூடுதல் விலை கொடுத்து கரும்பு கொள்முதல் செய்தாலும் விற்பனை செய்ய முடியுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com