அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th January 2021 10:06 PM | Last Updated : 29th January 2021 10:06 PM | அ+அ அ- |

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள்.
அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரி, திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வ தனபாக்கியம் முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் ரத்தினமாலா, சிஐடியு மாவட்டத் தலைவா் பிரபாகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஓய்வுபெறும் ஊழியா்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் என சுமாா் 300 போ் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து, கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.