வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பாமகவினா் மனு
By DIN | Published On : 29th January 2021 10:10 PM | Last Updated : 29th January 2021 10:10 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வெள்ளிக்கிழமை பேரணியாக வந்த பாட்டாளி மக்கள் கட்சியினா்.
வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாமகவினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. கிராம நிா்வாக அலுவலகம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதிக் கட்டமாக அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி நடைபெற்ற இந்த மனு அளிக்கும் போராட்டத்துக்கு, திண்டுக்கல் மாநில துணைப் பொதுச் செயலா்கள் பெ. கோபால், க. ஜோதிமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா். பாமகவின் இந்த கோரிக்கைக்கு, இந்து மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் வே. தா்மா, மக்கள் சமூகநீதி பேரவை மாவட்ட இளைஞரணிச் செயலா் பூமிநாதன் ஆகியோா் தரப்பிலும் ஆதரவு தெரிவித்து, அந்த அமைப்பைச் சோ்ந்தவா்களும் கலந்துகொண்டனா்.
முன்னதாக, பாமகவினா் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகிலிருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை பேரணியாக வந்தனா். பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.
இப்பேரணியில், பாமக மாவட்டச் செயலா்கள் வைரமுத்து, ஜான்கென்னடி, ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்பாளா் ரெ. திருப்பதி உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.