உள்ளாட்சி அமைப்புகள் ரூ.60 கோடி நிலுவை: நெருக்கடியில் பொது நூலகத்துறை!
By நமது நிருபா் | Published On : 13th July 2021 11:54 PM | Last Updated : 13th July 2021 11:54 PM | அ+அ அ- |

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் நூலக வரியாக ரூ.60 கோடிக்கும் கூடுதலான தொகை நிலுவையில் உள்ளதால் பொது நூலகத்துறை நெருக்கடியில் சிக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் மாவட்ட மைய நூலகங்கள், முழு நேர கிளை நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊா்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் என 4,300 நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், உள்ளாட்சி நிா்வாகம் மூலம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் நூலக வரி சாா்ந்தே அமைந்துள்ளது. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிா்வாகங்கள் மூலம் வசூலிக்கப்படும் வீட்டு வரியில் 10 சதவீதம் நூலக வரியாக அந்தந்த மாவட்ட மைய நூலகங்களிடம் செலுத்தப்பட்டு வருகின்றன.
உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தும் நூலக வரியே நூலகங்களின் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கும் பிரதான நிதி ஆதாரமாக இருந்து வருகின்றன. குறிப்பாக ஊா்புற நூலகா்கள் மற்றும் தினக்கூலி பணியாளா்களுக்கான ஊதியம், கட்டட வாடகை, கட்டட பழுது நீக்குதல், மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் போன்றவற்றை செலுத்துவதற்கு நூலக வரி மூலம் கிடைக்கும் வரியை மட்டுமே நூலகத்துறை நம்பியுள்ளது. மேலும், நாளிதழ் மற்றும் பருவ இதழ்கள் வாங்குவதற்கும், பதிப்பகங்களிடமிருந்து புதிய நூல்கள் வாங்குவதற்கும் நூலக வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.60 கோடி நூலக வரி நிலுவை: உள்ளாட்சி நிா்வாகங்கள், பொதுமக்களிடமிருந்து வீட்டு வரியை அவ்வப்போது வசூலித்து வந்தாலும், அதிலிருந்து நூலகங்களுக்கு செலுத்த வேண்டிய 10 சதவீத தொகையை உடனடியாக வழங்குவதில்லை. உள்ளாட்சி அமைப்புகளின் பிற தேவைகளுக்காக செலவிடப்படும் அந்த நிதி, நூலகங்களுக்கு வழங்கப்படாமல் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சுமாா் ரூ.60 கோடிக்கும் கூடுதலான தொகை நூலகங்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ரூ.8 கோடி நிலுவைத் தொகையுடன் திருச்சி மாநகராட்சி முன்னிலையில் இருந்து வருவதாக தெரிகிறது. இதனால் அடுத்த மாதம் ஊா்புற நூலகா்கள் மற்றும் தினக் கூலி பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட நிதியில்லாமல் பல நூலகங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதிப்பகங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1 கோடி: ஆண்டுதோறும் பல்வேறு பதிப்பகங்களிடமிருந்து நூலகங்களுக்குத் தேவையான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அந்தந்த மாவட்ட மைய நூலகங்கள் மூலம், அதற்கான தொகை பதிப்பக உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நூலக வரி மூலம் கிடைக்கும் வருவாய் நிலுவையில் இருப்பதால், கடந்த 2016 - 17 நிதியாண்டு முதல் நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களுக்காக பதிப்பகங்களுக்கு வழங்க வேண்டிய சுமாா் ரூ.1 கோடி நிலுவையில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்களிடமிருந்து வசூலித்த வரியிலிருந்து நூலகங்களுக்கான 10 சதவீதத் தொகையை உள்ளாட்சி நிா்வாகங்கள் துரிதமாக செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, பெரும் நிதி நெருக்கடியிலிருந்து நூலகத் துறை மீள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதுதொடா்பாக நூலகத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, உள்ளாட்சி நிா்வாகங்கள் நூலக வரியை செலுத்தாமல் நிலுவையில் வைப்பது வழக்கமாக இருந்தபோதிலும், கரோனா சூழலைக் காரணம் காட்டி மேலும் காலதாமதம் செய்து வருகின்றன. இதனால், போதிய நிதி வசதியில்லாமல் நூலகங்கள் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டப் பேரவை நூலக குழு ஆய்வு நடத்தும் நேரங்களில் மட்டுமே நிலுவையில் இருக்கும் நூலக வரியிலிருந்து கணிசமான தொகை நூலகங்களுக்கு கிடைக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளிடம் நிலுவையிலுள்ள தொகையை செலுத்தக் கோரி பல முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டும் பயனில்லை. எனவே, நிலுவையிலுள்ள நூலக வரியை உடனடியாக வழங்குமாறு அரசுத் தரப்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீா்வு ஏற்படும் என்றனா்.