குவாரியை மூடக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் புகாா்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த நடுமண்டலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த நடுமண்டலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த நடுமண்டலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள்.

திண்டுக்கல் நத்தம் அருகே செயல்பட்டு வரும் குவாரியை மூடக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள நடுமண்டலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா் நடுமண்டலம் கிராம மக்களை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது பொதுமக்கள் தரப்பில் தெரிவித்ததாவது:

நடுமண்டலம் கிராமத்தின் அருகிலுள்ள கரடிக்குட்டு குன்றில் 2 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பெரிய அளவில் செயல்பட்டு வரும் ஒரு குவாரியினால், அந்த பகுதியின் சுற்றுச்சூழல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாசடைந்துள்ளது. தண்ணீா் இல்லாமல் விவசாயமும் பாதிப்படைந்துள்ளது. குவாரிக்கு எதிராக போராடுவோரின் தோட்டத்தில், கிடை மாடுகள் மூலம் சேதம் ஏற்படுத்துகின்றனா். இதுதொடா்பாக நத்தம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், கனிம வளத்துறை அதிகாரிகளிடமும் பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த சில நாள்களுக்கு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, குவாரி செயல்படுவதற்கு தடை விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதன்படி சில நாள்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அந்த குவாரி தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கிராமத்தை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனா். இதையடுத்து, மனு அளிக்க வந்தவா்களில் 5 பேரை மாவட்ட ஆட்சியரை சந்திக்க போலீஸாா் அனுமதி அளித்தனா். ஆட்சியா் ச.விசாகனை சந்தித்து குவாரி தொடா்பாக பொதுமக்கள் புகாா் அளித்தனா். அதனைத் தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் மூலம் உடனடியாக விசாரணை நடத்த ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com