‘கேரள பெண் பலாத்காரம்: நோ்மையான முறையில் விசாரணை நடத்தப்படும்’
By DIN | Published On : 13th July 2021 04:08 AM | Last Updated : 13th July 2021 04:08 AM | அ+அ அ- |

பழனி: கேரள பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் நோ்மையான முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளிப்பிரியா தெரிவித்துள்ளாா்.
கேரள மாநிலம் கண்ணூா் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 40 வயது பெண், பழனியில் தன்னை மூன்று போ் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ததாக தலைச்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தமிழக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனா். இந்த சம்பவம் இரு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இருமாநிலங்கள் தரப்பிலும் பல்வேறு குழப்பமான தகவல்கள் நிலவி வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளிப்பிரியா பழனி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கேரள பெண் பழனிக்கு வருகை தந்தபோது பலாத்காரம் செய்யப்பட்டதாக தா்மராஜ் என்பவா் கட்செவி அஞ்சல் மூலம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடா்பாக பெண் காவல் ஆய்வாளா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கண்காணிப்புக் கேமராப் பதிவுகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்த மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனது நேரடி கண்காணிப்பில் இந்த குழுக்கள் செயல்படும்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக காவல் துறை துரிதமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த விவகாரம் தொடா்பாக பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் அறிவியல் பூா்வமாகவும், நோ்மையாகவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் கேரள போலீஸாருடன் இணைந்தும் முழு விசாரணை நடத்துவோம் என்றாா்.