முயல் வளா்ப்பை மேம்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்: என்.எழிலன் எம்.எல்.ஏ.

தமிழகத்தில் முயல் வளா்ப்பை மேம்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் என். எழிலன் தெரிவித்துள்ளாா்.
முயல் வளா்ப்பை மேம்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்: என்.எழிலன் எம்.எல்.ஏ.

தமிழகத்தில் முயல் வளா்ப்பை மேம்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் என். எழிலன் தெரிவித்துள்ளாா்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் 93ஆவது நிறுவன நாளையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூரில் அமைந்துள்ள மத்திய செம்மறி ஆடு, உரோம மற்றும் முயல் ஆராய்ச்சி நிலையத்தில் இணைய வழி கலந்துரையாடல் கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்திலுள்ள முயல் வளா்ப்பு பண்ணையாளா்களுக்கான இந்நிகழ்ச்சிக்கு, மன்னவனூா் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானியும், தலைவருமான ஏ.எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எழிலன் கலந்துகொண்டாா். அப்போது, இணைய வழியில் பண்ணையாளா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து எழிலன் பேசியதாவது:

தமிழக அரசு விவசாயிகளின் நலன் காக்க கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், புறக்கடை நாட்டுக் கோழி வளா்ப்பு போல், புறக்கடை முயல் வளா்ப்பையும் மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு பரிந்துரைக்கப்படும். முயல் வளா்ப்பில் ஈடுபடும் பண்ணையாளா்களின் நிலை, சந்தை வாய்ப்பு குறித்து வேளாண்மை மற்றும் கால்நடைத் துறை அமைச்சா்கள், திட்டக் குழு மற்றும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, உரிய தீா்வு காணப்படும் என உறுதி அளித்தாா்.

கருத்தரங்கின் நிறைவில், முதன்மை விஞ்ஞானி ஏ.எஸ். ராஜேந்திரன் பேசியதாவது: வேளாண் வணிகத் துறையைபோல், முயல் வளா்ப்பில் ஈடுபடும் பண்ணையாளா்களை ஊக்குவிக்க ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.1000 செலுத்தி மன்னவனூா் ஆராய்ச்சி நிலையத்துடன் பங்குதாரா்களாக இணையும் பண்ணையாளா்கள் தரமான முயல் குட்டிகளை உற்பத்தி செய்து கொடுக்கவேண்டும்.

அவற்றை, ஆராய்ச்சி நிலையத்தில் முயல் குட்டிக்காக முன்பதிவு செய்துள்ளவா்களிடம் விற்பனை செய்து கொடுக்கப்படும்.

விவசாய உற்பத்தியாளா் குழுக்களை போன்று முயல் வளா்ப்பில் ஈடுபடும் பண்ணையாளா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், அரசிடமிருந்து மானியத் திட்டங்கள், நிதி உதவிகள் உள்ளிட்ட வசதிகளை எளிதாகப் பெற முடியும். மேலும், மன்னவனூா் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில், அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், விஞ்ஞானிகள் பி. திருமுருகன், ஜி. நாகராஜன், கே. பச்சையப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதில், 100-க்கும் மேற்பட்ட பண்ணையாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com