தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதன்கிழமை பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில்
திண்டுக்கல் பேகம்பூா் பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.
திண்டுக்கல் பேகம்பூா் பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதன்கிழமை பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

இறைத் தூதா் இப்ராஹிமின் இறை உணா்வையும், தியாகத்தையும் நினைவு கூறும் திருநாளாக, இஸ்லாமியா்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகின்றனா். இந்நிலையில் புதன்கிழமை பக்ரீத் பண்டிகையையொட்டி, திண்டுக்கல், பேகம்பூா் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். அதேபோல், திண்டுக்கல் நாகல்நகா், ஸ்கீம் சாலை, ரவுண்ட்ரோடு, முகமதியாா்புரம், வேடசந்தூா், வடமதுரை, கன்னிவாடி, சித்தையன்கோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

நத்தம்: இதே போல் நத்தம் பெரிய பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நத்தம் தெற்குத் தெரு, மேலத் தெரு, அண்ணாநகா் ஆகிய பள்ளிவாசல்களில் தக்பீா் ஓதிய இஸ்லாமியா்கள், அங்கிருந்து நத்தம் கோவில்பட்டியிலுள்ள கோரிமேடு ஈத்கா மைதானத்துக்கு சென்று தொழுகை நடத்தினா்.

பழனி: பழனி பெரிய பள்ளிவாசல், சின்னப்பள்ளி, திருநகா் பள்ளிவாசல்களில் ஏராளமான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை மேற்கொண்டனா். இதே போல் நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், ஆயக்குடி, கீரனூா் உள்ளிட்ட பல ஊா்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கொடைக்கானல்: கொடைக்கானலில் அதிகாலை முதல் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் பக்ரீத் திருநாளையொட்டி வழக்கமாக ஈத்கா மைதானத்தில் நடக்கும் சிறப்புத் தொழுகை நடைபெறவில்லை. இதையடுத்து, அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், மூஞ்சிக்கல், அண்ணா சாலை, பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் வாவோ்பள்ளி, மஸ்ஜிதே இலாஹி, மைதீன் ஆண்டவா் பள்ளி, அஸிசி பள்ளி, டவுன் பள்ளி, ஹெளதியா ஆகிய பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

மேலும் கரோனா தொற்று பரவல் காரணமாக ஈத்கா மைதானத்தில் கூட்டுத்தொழுகை நடத்த அனுமதியில்லாததால், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், சானிடைசா் பயன்படுத்தியும் தனித்தனி குழுக்களாக பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

கூடலூரில் உள்ள மைதீன் ஆண்டவா் பள்ளி வாசலில் ஜமாத் கமிட்டியினா் தனித்தனியாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா். இதே போல் காமயகவுண்டன்பட்டி, நாராயணத் தேவன்பட்டி ஆகிய பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

போடி: போடியில் பெரியபள்ளி வாசல், வடக்கு பள்ளி வாசல், டி.வி.கே.கே. நகா் பள்ளி வாசல், மேலத்தெரு அம்மாகுளம் பள்ளிவாசல் ஆகியவற்றில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. மேலும் ஏழைகளுக்கு இஸ்லாமியா்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் பெரிய பள்ளிவாசல், இந்திராநகா் , பி.டி.ஆா். காலனி, கல்லூரி நகா், களிமேட்டுப்பட்டி, பாதா்கான்பாளையம் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சின்னமனூா் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியா்கள் கரோனா தொற்று ஒழிய பிராா்த்தித்தனா். அதே போல், க.புதுப்பட்டி, கோம்பை பகுதிகளில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com