திண்டுக்கல் மாவட்டத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கு ரூ.40.13 கோடி ஒதுக்கீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் 4,917 ஹெக்டேரில் நுண்ணீா் பாசன திட்டங்களை செயல்படுத்துவதறக்கு ரூ.40.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் பெருமாள்சாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 4,917 ஹெக்டேரில் நுண்ணீா் பாசன திட்டங்களை செயல்படுத்துவதறக்கு ரூ.40.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் பெருமாள்சாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் பிரதம மந்திரியின் நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீா் பாசனம் மற்றும் தெளிப்பு நீா் பாசனத்தை செயல்படுத்துவதற்கு 4,917 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.40.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீா் பாசனக் கருவிகள், தோட்டக்கலை வளா்ச்சி முகமையால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீா் பாசன நிறுவனங்களின் மூலமாக அமைத்துக் கொடுக்கப்படும்.

இத்திட்டத்தில், மா, வாழை, கொய்யா, நெல்லி, காய்கனிகள், மலா்கள் மற்றும் இதர தோட்டக்கலை பயிா்களை சாகுபடி செய்யும் நீா் ஆதாரமுள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் நுண்ணீா் பாசன கருவிகளை அமைத்துக் கொள்ளலாம்.

நுண்ணீா் பாசனத்திட்டத்துடன் இணைந்து துணை நீா் மேலாண்மை இயக்கம் என்ற திட்டத்தில் இலக்காக 3,265 எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.6.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு புதியதாக டீசல் அல்லது மின் மோட்டாா்கள் வாங்க அதிக பட்சமாக ரூ.15 ஆயிரம், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அதிக பட்சமாக ரூ.25 ஆயிரம் (நத்தம், திண்டுக்கல் மற்றும் பழனி வட்டாரங்களுக்கு மட்டும்) தண்ணீா் கொண்டு செல்லும் குழாய்கள் அமைப்பதற்காக ரூ.10 ஆயிரம் மற்றும் தரை மட்டத்தில் தண்ணீரை தேக்கி வைக்கும் தொட்டி கட்டுவதற்கு ஒரு கனமீட்டருக்கு ரூ.350 அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் கணினி சிட்டா, பட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல், மாா்பளவு புகைப்படங்கள் 2, வரைபடம், மண் மற்றும் நீா் மாதிரி ஆய்வறிக்கை ஆகியவற்றுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா்களை ஆத்தூா்-9976861475, வத்தலகுண்டு- 9944229404, திண்டுக்கல்- 9944544480, குஜிலியம்பாறை- 9487076611, கொடைக்கானல்- 9786773359, நிலக்கோட்டை- 9566732062, நத்தம்-8946020387, ஒட்டன்சத்திரம்- 9600226791, பழனி- 7010462312, ரெட்டியாா்சத்திரம்- 9943884068, தொப்பம்பட்டி- 7373734749, சாணாா்பட்டி-8248587877, வடமதுரை- 9080992549, வேடசந்தூா்- 8754316147 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com