ஓ.எல்.எக்ஸ். செயலி மூலம் ரூ.20ஆயிரம் மோசடி: சென்னை இளைஞா் கைது

ஓ.எல்.எக்ஸ். செயலி மூலம் பழைய மோட்டாா் சைக்கிளை விற்பனை செய்வதாகக் கூறி ரூ.20 ஆயிரம் மோசடி செய்த சென்னையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஓ.எல்.எக்ஸ். செயலி மூலம் பழைய மோட்டாா் சைக்கிளை விற்பனை செய்வதாகக் கூறி ரூ.20 ஆயிரம் மோசடி செய்த சென்னையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் என்ஜிஓ. காலனியைச் சோ்ந்தவா் தினேஷ். இவா், தனியாா் செயலி மூலம் குறைந்த விலையில் மோட்டாா் சைக்கிள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான விளம்பரத்தை பாா்த்துள்ளாா். அந்த செயலியிலிருந்த வாகன உரிமையாளரின் செல்லிடப்பேசி எண்ணில் தினேஷ் தொடா்பு கொண்டாராம்.

வாகனத்தின் உரிமையாளா் மதுரையில் இருப்பதாகக் கூறி, வாகனம் வேண்டுமெனில் முன்பணமாக ரூ.20 ஆயிரத்தை அவரது வங்கிக் கணக்கிற்கு செலுத்துமாறு தெரிவித்துள்ளாா். அதன்படி ரூ.20 ஆயிரத்தை தினேஷ் செலுத்தியுள்ளாா். பின்னா், அந்த நபரை தொடா்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த தினேஷ், இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட இணைய வழிக் குற்றத் தடுப்பு (சைபா் க்ரைம்) பிரிவில் புகாா் அளித்துள்ளாா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சந்திரன் அறிவுறுத்தலின்படி, ஆய்வாளா் குரு வெங்கட்ராஜ் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது. அதில், ஓஎல்எக்ஸ் மூலம் வாகனம் விற்பனை செய்வதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய நபா் சென்னை வீராபுரம் பகுதியைச் சோ்ந்த ஆனந்தபாபு (25) என்பது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து சென்னை சென்ற போலீஸாா் ஆனந்தபாபுவை செவ்வாய்க்கிழமை கைது செய்து திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தனா். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ஆனந்தபாபு, பின்னா் சிறையில் அடைக்கப்பட்டாா். அவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com