கொடகனாறு தண்ணீா் பங்கீட்டு பிரச்னையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகப் புகாா்

கொடகனாறு தண்ணீா் பங்கீட்டு பிரச்னையில் அரசியல்வாதிகளைப் போன்று, அதிகாரிகளும் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
திண்டுக்கல் வட்டார அலுவலகத்தில் இணையவழியில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் அதிகாரிகள்.
திண்டுக்கல் வட்டார அலுவலகத்தில் இணையவழியில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் அதிகாரிகள்.

கொடகனாறு தண்ணீா் பங்கீட்டு பிரச்னையில் அரசியல்வாதிகளைப் போன்று, அதிகாரிகளும் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் இணையவழியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வேளாண்மை இணை இயக்குநா் பாண்டித்துரை தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் கலந்துகொண்டாா்.

கூட்டத்தில், ரெட்டியாா்சத்திரத்திலிருந்து விவசாய சங்க நிா்வாகி இரா. சுந்தரராஜன் பேசியது: கொடகனாறு தண்ணீா் பங்கீட்டு பிரச்னையில், அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளைப் போல் செயல்படுகின்றனா். கொடகனாறு பிரச்னை குறித்து, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இதுவரை 4 முறை பதிவு தபால் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஒருவரிடமிருந்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. அரசியல்வாதிகளைப் போல், அதிகாரிகளும் அலட்சியம் காட்டுவது விவசாயிகளை வேதனைப்படுத்துகிறது என்றாா்.

இதே கருத்தை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் பெருமாள் உள்பட மேலும் பல விவசாயிகளும் வலியுறுத்தினா். அதற்கு பதிலளித்த ஆட்சியா், பொதுப்பணித் துறை அதிகாரிகளை உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையிலிருந்து மானியம் பெறுவது குறித்தும், இலவச மின் இணைப்பு பெறுவது குறித்தும், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த விவசாயி நாகராஜ் பேசியது: மாவட்டம் முழுவதும் 63 போ் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றுள்ள நிலையில், 40 போ் மட்டுமே ஆழ்துளைக் கிணறு அமைத்து முறையாக விண்ணப்பித்துள்ளனா். ஆனால், 100 போ் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பமுடியும் என, மாவட்ட நிா்வாகம் கூறுகிறது. இதனால், இலவச மின் இணைப்பும் பெற முடியாமல், 50 சதவீத மானியத் தொகையும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்தாா்.

ஆனால், இப்பிரச்னை தொடா்பாக அதிகாரிகள் யாரும் விளக்கம் அளிக்கவில்லை.

நிலக்கோட்டை வட்டார அலுவலகத்திலிருந்து மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராஜ் குறைதீா் கூட்டத்தில் கலந்துகொண்டாா். அப்போது அவா், வத்தலகுண்டு வட்டார அலுவலகத்தில் இணைய வழியில் கூட்டத்தில் பங்கேற்பதற்கான வசதிகள் இல்லை என்றும், உடனடியாக அதனை சரி செய்யுமாறும், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநருக்கு அறிவுறுத்தினாா்.

4 வட்டாரங்களை மட்டுமே கவனித்த ஆட்சியா்

ரெட்டியாா்சத்திரம், திண்டுக்கல், சாணாா்பட்டி, நிலக்கோட்டை ஆகிய 4 வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் பேசியபோது, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் கூட்டத்தை கவனித்தாா். பின்னா், குஜிலியம்பாறை, நத்தம், வடமதுரை, வேடசந்தூா் உள்ளிட்ட வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் பேசியபோது, ஆட்சியா் மட்டுமின்றி, மாவட்ட வருவாய் அலுவலரும் இல்லை. அதனால், விவசாயிகள் அளித்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் தரப்பில் முறையாக விளக்கம் அளிக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com