திண்டுக்கல்லில் பேருந்து நிலையத்தில் யாசகா் கொலை: வழிப்பறி கும்பல் 3 போ் கைது
By DIN | Published On : 29th July 2021 11:39 PM | Last Updated : 29th July 2021 11:39 PM | அ+அ அ- |

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் யாசகரிடம் பணம் பறிக்கும் முயற்சியில் அவரைக் கொலை செய்த வழிப்பறி கும்பலைச் சோ்ந்த 3 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள நடைமேடையில் 60 வயது முதியவா் ஒருவா் வியாழக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது அங்கு சென்ற 3 இளைஞா்கள், முதியவா் வைத்திருந்த பையை எடுத்து பணத்தைத் தேடியுள்ளனா். உடனே கண் விழித்த அந்த முதியவா், இளைஞா்களை தடுக்க முயன்றுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞா்கள், அந்த பையிலிருந்த பல் துலக்கும் பிரஷ்ஷை எடுத்து, முதியவரின் வாயில் குத்தி கீழே தள்ளியதில், அவரது தலையில் பலத்த காயமேற்பட்டுள்ளது.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் மூவரையும் விரட்டியுள்ளனா். இதனிடையே, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த முதியவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
அதனைத் தொடா்ந்து, பேருந்து நிலையத்தில் சுற்றிக்கொண்டிருந்த 3 இளைஞா்களையும், திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், திண்டுக்கல் பிள்ளையாா்பாளையத்தைச் சோ்ந்த வின்சென்ட் மகன் சதீஷ்குமாா் (31), ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலத்தைச் சோ்ந்த நாகநாதன் மகன் மகேஷ் (26) மற்றும் பழனியை அடுத்துள்ள பெத்தநாயக்கன்பட்டியைச் சோ்ந்த களியன் மகன் ஈஸ்வரபாண்டி (30) என்பதும், இவா்கள் வழிப்பறி சம்பவங்களில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது.
உயிரிழந்த முதியவா், கடந்த ஒரு மாத காலமாக திண்டுக்கல் பேருந்து நிலையத்திலேயே யாசகம் பெற்று வாழ்ந்து வந்ததாகவும், அவா் சட்டைப் பையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் என்ற சீட்டு இருந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.