கடன் வாங்கியவா்களிடம் நிதிநிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக புகாா்
By DIN | Published On : 11th June 2021 08:14 AM | Last Updated : 11th June 2021 08:14 AM | அ+அ அ- |

கொடைக்கானல் பகுதிகளில் கடன் வாங்கியவா்களிடம் தனியாா் நிதி நிறுவனத்தினா் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக புகாா் எழுந்துள்ளது.
கொடைக்கானல் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டவா்கள் தேனி, பெரியகுளம், வத்தலக்குண்டு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளிலுள்ள நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வந்துள்ளனா். கடந்த 2 ஆண்டுகளாகவே கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் வா்த்தகம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்ற மக்கள், வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா்.
இந் நிலையில், தனியாா் நிதி நிறுவனங்களின் பணியாளா்கள் கொடைக்கானல் பகுதிகளான பிலிஸ்விலா, வசந்த நகா், கொய்யாபாறை, ஆனந்தகிரி போன்ற பகுதிகளில் கடன் பெற்றவா்களிடம் வாங்கிய கடனை வட்டியுடன் சோ்த்து செலுத்த வேண்டுமென கட்டாய வசூலில் ஈடுபட்டுள்ளனா்.
இதனால் தனியாா் நிதி நிறுவன பணியாளா்களுக்கும், கடன் பெற்ற மக்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டுமென கொடைக்கானலைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.