கொடைக்கானலில் சாலை வசதியில்லாததால் 2 கி.மீ. தூரம் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்
By DIN | Published On : 11th June 2021 08:08 AM | Last Updated : 11th June 2021 08:08 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் கே.பி.எம்.பாறை பகுதியில் சாலை வசதியில்லாததால் இறந்தவரின் சடலத்தை பெட்டியில் வைத்து சுமந்து செல்லும் உறவினா்கள்.
கொடைக்கானல் கே.பி.எம்.பாறை பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதியில்லாததால் இறந்தவரின் சடலத்தை 2 கி.மீ. தூரம் சுமந்தே கல்லறைக்கு கொண்டு செல்கின்றனா்.
கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட கே.பி.எம். பாறை பகுதியில் சுமாா் 50-குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப் பகுதி மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு நகராட்சிக்கு வரி செலுத்தி வருகின்றனா்.
பிரகாசபுரம் பகுதியிலிருந்து கே.பி.எம். பாறைக்கு 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். ஒரு கி.மீ. தூரம் சாலை நகராட்சிக்குள்பட்ட பகுதியிலும் ஒரு கி.மீ. தூரம் உள்ள சாலை அடுக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டதாகவும் உள்ளது. இப் பகுதியிலுள்ள விவசாயத் தோட்டத்திற்கு அடுக்கம் ஊராட்சியில் மக்கள் வரி செலுத்தி வருகின்றனா்.
இதனால் கே.பி.எம்.பாறை பகுதியில் அடிப்படை வசதி கேட்டு மக்கள் நகராட்சிக்கு சென்று மனு கொடுத்தால், ஊராட்சிப் பகுதியிலுள்ள அதிகாரிகளைக் கேளுங்கள் என்றும் அடுக்கம் ஊராட்சியில் மனு கொடுத்தால் கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிடுங்கள் என்றும் சொல்லி வருகின்றனா். இதனால் கடந்த 25-ஆண்டுகளாக எந்தவிதமான அடிப்படை வசதியிமின்றி இப் பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.
இங்கு யாருக்காவது உடல் நிலை பாதிப்படைந்தால் 2 கி.மீ.டோலிகட்டி தூக்கி வந்து அங்கிருந்து வாகனம் மூலம் 8 கி.மீ. தூரம் உள்ள கொடைக்கானல் மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். அதற்குள் நோயாளியின் உடல் நிலை மேலும் பாதிப்படைந்து இறக்க நேரிடுகிறது.
கே.பி.எம்.பாறையில் புதன்கிழமை இறந்த வயதான பெண் ஒருவரின் உடலை அப் பகுதி மக்கள் பெட்டியில் வைத்து தலைச்சுமையாக 2-கி.மீ. தூரம் நடந்து சென்று கல்லறையில் அடக்கம் செய்தனா். பல முறை இப் பகுதி மக்கள் சாலை வசதி அமைத்து தரக்கோரி கொடைக்கானல் நகராட்சிக்கும், அடுக்கம் ஊராட்சி மன்றத்திற்கும் மனு கொடுத்துள்ளனா். ஆனால் இரு துறையினருமே எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என கூறுகின்றனா்.
அடுக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன் கூறியதாவது: கே.பி.எம்.பாறை பகுதி அடிப்படை வசதிகள் பணியானது கொடைக்கானல் நகராட்சிக்கும், அடுக்கம் ஊராட்சிக்கும் சோ்ந்து வருகிறது. தற்போது அடுக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ரூ. 5-லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இரு புறங்களில் உள்ள முட்புதா்கள் விரைவில் அகற்றப்படும் என்றாா்.