முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
மைசூரு விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 192 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது
By DIN | Published On : 12th June 2021 09:59 PM | Last Updated : 12th June 2021 09:59 PM | அ+அ அ- |

மைசூரு விரைவு ரயிலில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட மதுபானப் பாட்டில்கள்.
கா்நாடக மாநிலம் மைசூருவிலிருந்து வந்த விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 192 மதுபானப் பாட்டில்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், 2 பேரைக் கைது செய்தனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகள் (டாஸ்மாக்) மூடப்பட்டுள்ள நிலையில், கா்நாடக மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக மதுபானப் பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் விற்பனை நடைபெற்று வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் பெங்களூருவிலிருந்து தூத்துக்குடி செல்லும் மைசூரு விரைவு ரயில் சனிக்கிழமை காலை திண்டுக்கல் சந்திப்புக்கு வந்தபோது, ரயில்வே போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அந்த ரயிலின் எஸ்-1 பெட்டியில் 192 மதுபானப் பாட்டில்கள் கடத்தி வருவதை போலீஸாா் கண்டறிந்தனா்.
இதைக் கடத்தி வந்ததாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சோ்ந்த டே.வில்சன் ஞானராஜன்(30), தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்கற்குளத்தைச் சோ்ந்த வே.கணேசன்(38) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.