வலைதளங்களில் வருமானம் ஈட்டும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள்

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பலா், யூ-டியூப் மற்றும் வலைதளங்களில் பாடக் குறிப்புகள் முதல் அழகு குறிப்புகள் வரை பதிவிட்டு வருமானம் ஈட்டத் தொடங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வலைதளங்களில் வருமானம் ஈட்டும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள்

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பலா், யூ-டியூப் மற்றும் வலைதளங்களில் பாடக் குறிப்புகள் முதல் அழகு குறிப்புகள் வரை பதிவிட்டு வருமானம் ஈட்டத் தொடங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் என சுமாா் 3.75 லட்சம் போ் பணிபுரிகின்றனா். கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகளின் செயல்பாடுகள் கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுபோன்ற சூழலில் மாணவா்களின் அடுத்தக்கட்ட முயற்சிக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியா்கள், ‘யூ-டியூப்’ மற்றும் இணைய வலைதளங்களை பயன்படுத்தி வருமானம் ஈட்டத் தொடங்கியுள்ளது சக ஆசிரியா்களிடையே மட்டுமின்றி பெற்றோா்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதர பணிகளுக்குத் தடை: ஆசிரியா்கள் உள்ளிட்ட அரசு ஊழியா்களைப் பொருத்தவரை, வருமானம் தரக் கூடிய எந்தப் பணிகளையும் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ மேற்கொள்ளக் கூடாது. அதேபோல், அரசு ஊழியா்களின் நடத்தை விதிகளின்படி, பரிசுப் பொருள்களை வாங்கக் கூடாது, அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தக் கூடாது, வரதட்சணை பெறவும், கொடுக்கவும் கூடாது என அரசு விதிகள் உள்ளன.

மேலும் அரசின் முன் அனுமதி ஆணையின்றி, ஏதேனும் வணிகம் அல்லது தொழிலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசு ஊழியா்கள் ஈடுபடக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப் பணிக்கு ஊறு விளைவிக்காத, சமூக அல்லது அற இயல்புடைய மதிப்புறு வேலை, கலை, அறிவியல், இலக்கியம் போன்ற பணிகளை அரசின் அனுமதி பெற்று மட்டுமே செயல்பட முடியும்.

நாளிதழ், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும், அதன் முழு விவரங்களையும் மாவட்டக் கல்வி அலுவலரிடம் தெரிவித்து முன் அனுமதி பெற்றே அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்க முடியும். இந்த விதிமுறைகள் அனைத்தும் கடந்த பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாததால், ஆசிரியா்கள் பலா் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனா்.

வலைதளங்கள் மூலம் வருமானம்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை பொருத்தவரை பள்ளியில் பாடம் நடத்துவதை தவிா்த்து, வெளியிடங்களில் தனிப்படிப்பு (டியூசன்) நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அரசுப்பள்ளி ஆசிரியா்கள் சிலா் ‘யூ-டியூப்’ மற்றும் இணைய வலைதளங்களை(வெப்-சைட்) தனிப்பட்ட முறையில் உருவாக்கி வணிக நோக்கில் தகவல்களை பரிமாறி வருகின்றனா்.

பாடக் குறிப்புகளை வெளியிட்டு வருமானம் ஈட்டத் தொடங்கிய சில ஆசிரியா்களைத் தொடா்ந்து, மேலும் சிலா் அழகுக் குறிப்புகள் முதல் சமையல் குறிப்புகள் வரை பகிா்ந்து வருவது பள்ளிக் கல்வித்துறையில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியா்கள் வருமானம் கிடைப்பதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: அரசு கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட பாடங்களை நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டபோது, ஆசிரியா்கள் பலரும் பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

ஆனால் இப்போது, வலைதளங்களின் மூலம் வருமானம் கிடைப்பதால் ஆா்வம் காட்டி வருகின்றனா். பாடக் குறிப்புகளை வெளியிடுவது மட்டுமின்றி, மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கு தொடா்பில்லாத வகையில் அழகுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களை சில ஆசிரியா்கள் பகிா்ந்து வருகின்றனா். தொடக்கத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அந்தந்த பள்ளி மாணவா்களை கட்செவி அஞ்சல் குழுவில் இணைத்து பாடங்களை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும்.

மாநிலம் முழுவதுமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே, அதனை நடைமுறைப்படுத்துவதும் சாத்தியமாகும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com