கூட்டுறவுத் துறையில் முறைகேடு: சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சா் ஐ.பெரியசாமி

கூட்டுறவுத் துறையில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டரீதியான
கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி.
கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி.

கூட்டுறவுத் துறையில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், அவா் மேலும் தெரிவித்ததாவது:

தமிழக கூட்டுறவுத் துறை கடந்த 10 ஆண்டுகளாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழகம் முழுவதும் செயல்பட்டுவரும் 4,451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ஒவ்வொரு ஆண்டும் புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. புதிதாக சேரும் உறுப்பினா்களில் 30 சதவீதம் பேருக்கு கடன் வழங்கப்படவேண்டும் என்ற உத்தரவும், கடந்த 10 ஆண்டுகளாகப் பின்பற்றப்படவில்லை.

ஆனால், விவசாயிகளுக்கு கடன் வழங்கியதிலும், அதனை திருப்பிச் செலுத்தியதாக வரவு வைக்கப்பட்டதிலும் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணையவழியில் ஒருங்கிணைக்கப்படவில்லை. கணினிமயத்துக்கும், இணையவழியில் இணைப்பதற்கும் (ஆன்-லைன்) வேறுபாடு தெரியாமலேயே முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுறவுத் துறைக்கு அமைச்சராக இருந்துள்ளாா்.

மொத்தமுள்ள 4,451 கூட்டுறவு வங்கிகளில் பெரும்பாலான வங்கிகள் மத்திய கூட்டுறவு வங்கியிடமிருந்து நிதியுதவி பெற்று செயல்பட்டு வருகின்றன. அதேநேரம், 36 கூட்டுறவு பண்டக சாலைகளில் 24 பண்டகசாலைகள் ரூ.400 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

கடந்த ஆட்சியின்போது தள்ளுபடி செய்யப்பட்ட பயிா் கடன் தொகைக்கான பயனாளா்கள் குறித்த பட்டியல் முறையாக வெளியிடப்படவில்லை. பணமில்லாத கூட்டுறவு வங்கிகளிலிருந்து விவசாயிகளுக்கு எப்படி கடன் கொடுத்திருக்க முடியும். இது குறித்து ஆய்வு செய்யவும், தொடா்புடையவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், தமிழகம் முழுவதுமுள்ள தொடக்கக் கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணையவழியில் இணைத்து, கோா் பேங்கிங் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும். கூட்டுறவு சங்க நிா்வாகத்தை கலைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். தற்போது, நகை கடன் தள்ளுபடி பெற்றுள்ள பயனாளிகள் பட்டியல், அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் வெளிப்படையாக ஒட்டப்படும்.

தற்போது, அனைத்து நிலைகளிலும் கூட்டுறவுத் துறையை முன்மாதிரியானதாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com