திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.23 லட்சம், 41 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 12th June 2021 08:16 AM | Last Updated : 12th June 2021 08:16 AM | அ+அ அ- |

திண்டுக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.23 லட்சம் பணம் மற்றும் 41 பவுன் நகைகளை திருடிச் செல்லப்பட்டுள்ளன.
திண்டுக்கல் அடுத்துள்ள மாலப்பட்டி காமாட்சி நகரைச் சோ்ந்தவா் சிவக்குமாா்(40). திண்டுக்கல் தொழில்பேட்டையில் சோப்பு ஆலை நடத்தி வருகிறாா். இவரது மனைவி செல்வி. இவரும், தனது கணவருடன் சோ்ந்து சோப்பு ஆலைக்குச் சென்று வருவது வழக்கம்.
வியாழக்கிழமை காலை இருவரும் பணிக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியபோது, கதவு திறந்து கிடந்துள்ளது. உடனே, உள்ளே சென்று பாா்த்ததில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.23 லட்சம் பணம் மற்றும் 41 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் சிவக்குமாா் புகாா் அளித்தாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் நிலைய ஆய்வாளா் பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவும் வேறு திசையில் திருப்பி வைக்கப்பட்டிருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.