ஆழியாறு - பரம்பிக்குளம் குடிநீா் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: அமைச்சா் தகவல்
By DIN | Published On : 15th June 2021 11:15 PM | Last Updated : 15th June 2021 11:15 PM | அ+அ அ- |

பழனியை அடுத்த தாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்ணுக்கு 2 ஆம் கட்ட நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகைப் பொருள்களை வழங்கிய அமைச்சா் அர. சக்கரபாணி.
பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஆழியாறு - பரம்பிக்குளம் குடிநீா் திட்டம் ரூ. 630 கோடி மதிப்பீட்டில் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாளையூத்து, வயலூா், கொழுமங்கொண்டான், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா இரண்டாம் கட்ட நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதையொட்டி வயலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு மளிகை தொகுப்பு அடங்கிய பை மற்றும் நிவாரண நிதி வழங்கி அமைச்சா் அர. சக்கரபாணி பேசியது:
கடும் கட்டுப்பாடுகளால் தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்துள்ளது. பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அவா்களின் நீண்ட நாள் கனவான ஆழியாறு- பரம்பிக்குளம் குடிநீா் திட்டம் ரூ. 630 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.4196.38 கோடி செலவில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை இரண்டாவது தவணையாக ரூ. 2000 வழங்கும் திட்டமும், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.844.51 கோடி செலவில் கோதுமை மாவு, ரவை, சா்க்கரை, உளுந்தம் பருப்பு, புளி, உள்ளிட்ட 14 அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராசு, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் முருகேசன், மேலாண்மை இயக்குநா் ராமகிருஷ்ணன், பழனி வருவாய் கோட்டாட்சியா் ஆனந்தி, வட்டாட்சியா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.