நத்தத்தில் முன்னாள் அமைச்சா் விசுவநாதன் உருவ பொம்மையை எரித்து அமமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 21st June 2021 10:59 PM | Last Updated : 21st June 2021 10:59 PM | அ+அ அ- |

சசிகலாவை அவதூறாக பேசியதாக, முன்னாள் அமைச்சா் விவசுநாதனைக் கண்டித்து நத்தத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமமுகவினா் அவரது உருவ பொம்மையை தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய நத்தம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான இரா.விசுவநாதன், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குறித்து கடுமையாக விமா்சனம் செய்தாா். மேலும் அந்தக் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராகவும் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதனால் விவசுவநாதனுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் நத்தத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமமுக மாவட்ட இளைஞா் பாசறை செயலா் ராஜா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின் போது விசுவநாதனைக் கண்டித்து முழக்கமிட்ட அமமுக தொண்டா்கள், அவரது உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனா். அதைத்தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் உருவ பொம்மையை கைப்பற்றி தீயை அணைத்தனா். இதனால் நத்தம் பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.