வன சோதனைச் சாவடிகள் நவீனப்படுத்தப்படுமா?
By நமது நிருபா் | Published On : 24th June 2021 06:43 AM | Last Updated : 24th June 2021 06:43 AM | அ+அ அ- |

கன்னிவாடி வனச் சரகத்திற்குள்பட்ட தருமத்துப்பட்டி பன்றிமலை சாலையிலுள்ள வன சோதனைச் சாவடி.
வனப் பகுதியில் ஆயுதங்களுடன் வேட்டையில் ஈடுபடுதல், மரங்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க வன சோதனைச் சாவடிகளை தொழில் நுட்ப ரீதியாக நவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில், திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் என 2 வனக் கோட்டங்கள் உள்ளன. சுமாா் 1.38 லட்சம் ஹெக்டோ் பரப்பிலான வனப்பகுதி, பூம்பாறை, மன்னவனூா், பெரும்பள்ளம், பேரிஜம், கொடைக்கானல், பழனி, வந்தரேவு, தேவதானப்பட்டி, சிறப்பு சரகம், அழகா்கோயில், நத்தம், அய்யலூா், சிறுமலை, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு என 16 வனச் சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்திலுள்ள வனப் பகுதியில், நாவல், இருமாங்கனி, தைல மரம், வெக்காலி, ஈட்டி, தேக்கு, சந்தனம், கருங்காலி உள்ளிட்ட மரங்களும், புலி, யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், காட்டுப் பன்றி, மரநாய், மலபாா் அணில், எறும்பு திண்ணி உள்ளிட்ட விலங்குகளும், இருவாச்சி, காட்டுக் கோழி, மயில் உள்ளிட்ட பறவைகளும் வசித்து வருகின்றன.
சோதனைச் சாவடிகளில் 24 மணி நேர பணி: பழனி, ஒட்டன்சத்திரம், தருமத்துப்பட்டி, சித்தரேவு, கெங்குவாா்பட்டி, பெருமாள்மலை, வந்தரேவு, பேரிஜம், சிறுமலை உள்ளிட்ட இடங்களில் வன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வன சோதனைச் சாவடிகளில் 24 மணி நேர பணியில் ஈடுபடுவதால், மலைப் பகுதிக்கு செல்லும் வாகனங்களை முழுமையாகக் கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்படுவதில்லை: வன சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், அவை கணினி திரையுடன் இணைக்கப்படவில்லை. குறிப்பாக மின்சாரம் இல்லாத நேரங்களில் கேமராக்களின் செயல்பாடு கேள்விக்குறியாகிவிடுகிறது. மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை வனத்துறை உயா் அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
நவீன சோதனைச் சாவடிகள் தேவை: இதுகுறித்து வளா்ப்பு யானைகள் பாதுகாப்பு குழுவின் முன்னாள் உறுப்பினா் அருண் சங்கா் கூறியதாவது: காவல் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளா்ச்சி, இதுவரை வனத்துறையில் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும், கணினியில் சேமிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வன சோதனைச் சாவடியைக் கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் சென்சாா் ஸ்கேனா் மூலம் ஆய்வுக்குள்படுத்த வேண்டும். அதன் மூலம் முறைகேடாக மரங்கள் கடத்தப்படுவதும் தடுக்கப்படும்.
8 மணி நேர பணியை அமல்படுத்துவதோடு, இரவு நேரங்களில் 2 ஊழியா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதிகளோடு, ஊழியா்களும் நெருக்கடி இல்லாமல் பணிபுரியும் போது வனப் பகுதியில் அத்துமீறல்களை தடுக்க முடியும் என்றாா்.
இதுதொடா்பாக வனத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வன சோதனைச் சாவடிகளை நவீனப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுதொடா்பாக கருத்துரு கேட்கப்பட்டபோது, வனச் சரகா்கள் தரப்பில் எவ்வித பரிந்துரையும் அளிக்கப்படவில்லை. தற்போதுள்ள சூழலில் சோதனைச் சாவடிகளை நவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனா்.