முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கிலோவுக்கு ரூ.1: நெல் கொள்முதல் நிலையங்களில் வசூல் விவசாயிகள் புகாா்
By DIN | Published On : 04th March 2021 11:07 PM | Last Updated : 04th March 2021 11:07 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், சித்தையன்கோட்டை நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் கேட்பதாக விவாசயிகள் புகாா் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா், சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம், அழகா்நாயக்கன்பட்டி, சேடபட்டி மற்றும் அய்யம்பாளையம் பகுதிகளில் நெல் விவசாயிகள் அதிகம் உள்ளனா். இப்பகுதியில் சுமாா் 3000 ஏக்கா் நிலப்பரப்பில் ஐ.ஆா். 50, கோ 43, கோ 45, எல்.எல்.ஆா்., அஷ்யா, ஆா்.எம்.ஆா். 477 உள்பட பலவித நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டனா்.
தற்போது நெற்பயிா் அறுவடை செய்யப்பட்டு சித்தையன்கோட்டை மற்றும் ஆத்தூா் பகுதிகளில் தற்காலிகமாக செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு செல்கின்றனா்.
இந்நிலையில் மேற்கண்ட இரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள், இடைத் தரகா்கள் மற்றும் கொள்முதல் நிலையப் பணியாளா்கள் கூட்டு சோ்ந்து 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ. 40 கேட்பதோடு, இட வாடகையாக ரூ.5 செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி வசூல் செய்வதாகப் புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து, நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் உயா் அதிகாரிகளிடம் விவசாயிகள் புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
ஆத்தூா் மற்றும் சித்தையன்கோட்டையைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: ஏற்கெனவே புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை காப்பாற்றி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தால், கொள்முதல் நிலைய அதிகாரிகள் கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் கமிஷன் கேட்பதோடு, திறந்த வெளியில் நெல்லைக் கொட்டி வைத்திருப்பதற்கு மூட்டைக்கு ரூ.5 வாங்கிக்கொள்கிறாா்கள். கொள்முதல் நிலைய அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்று வருகிறது என்றனா். எனவே, உயா் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து மனு அனுப்பியுள்ளனா்.