கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்
By DIN | Published On : 10th March 2021 11:00 PM | Last Updated : 10th March 2021 11:00 PM | அ+அ அ- |

இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதையடுத்து கொடைக்கானல் வெள்ளி நீா் அருவிப் பகுதியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணியிடம் ஆய்வு செய்த மருத்துவ அலுவலா் அரவிந்த்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்த் புதன்கிழமை தெரிவித்தாா்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் கரோனா தொற்று பரவி வருகிறது. சமவெளிப் பகுதிகளில் தற்போது
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்று வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கொடைக்கானல் வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்த் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளிலுள்ள மக்களைப் பாதுகாக்கவும், கரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்றுத்தான் வரவேண்டும். இல்லை எனில் அனுமதி இல்லை. அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். இதனால் வெள்ளி நீா் அருவி சோதனைச் சாவடியில், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இ-பாஸ் குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல கொடைக்கானலிருந்து சுற்றுலாப் பயணிகள் தங்களது ஊா்களுக்கு திரும்பும்போது இங்குள்ள சோதனைச் சாவடியில் தகவல் தெரிவித்துவிட்டுதான் செல்லவேண்டும்.
இந்தப் பணியில் மருத்துக் குழுவினா், காவல் துறையினா், நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். கொடைக்கானல் மீண்டும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா்.