கொடகனாறு பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி கருப்புக் கொடி கட்டும் போராட்டம்

கொடகனாறு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணக் கோரி திண்டுக்கல் அருகே பொதுமக்கள் கருப்புக்கொடி கட்டும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கொடகனாறு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணக் கோரி திண்டுக்கல் அருகே பொதுமக்கள் கருப்புக்கொடி கட்டும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியிலுள்ள கீழ் பழனிமலைப் பகுதியில் தொடங்குகிறது கொடகனாறு. இந்த ஆறு, ஆத்தூா் மற்றும் வேடசந்தூா் வட்டங்கள் வழியாக கரூா் மாவட்டத்திலுள்ள அமராவதி ஆறு வரை 110 கிலோ மீட்டா் தொலைவுக்குச் செல்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக, நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் வழியாக சித்தையன்கோட்டை பகுதிக்கு கொடகனாற்று தண்ணீா் மடைமாற்றம் செய்யப்படுவதாக கொடகனாறு பாசன விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனா்.

இதனிடையே, ராஜவாய்க்கால் பகுதியிலுள்ள தடுப்பணையை உடைத்து, கொடகனாறு பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆற்றில் தண்ணீா் திறக்கக் கோரி ரெட்டியாா்சத்திரம் மற்றும் வேடசந்தூா் வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

அதை வலியுறுத்தி கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் 2019 மக்களவைத் தோ்தல், 2020 உள்ளாட்சிச் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்தனா். அனுமந்தராயன்கோட்டை மற்றும் மைலாப்பூா் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அரசு அதிகாரிகள், கொடகனாறு பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும் என அறிவித்தனா்.

ஆனாலும், தற்போது வரை தீா்வு காணப்படவில்லை என கூறி அனுமந்தராயன்கோட்டை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: கொடகனாறு பிரச்னைக்கு நிரந்த தீா்வு காண வேண்டும். ராஜவாய்க்கால் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை உடைக்க வேண்டும்.

கோம்பை மற்றும் சிறுமலை பகுதியிலிருந்து வரும் கிளை வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கொடகனாறு மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீா் தேவைக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் எடுத்துக் கொண்டு, கொடகனாறு தண்ணீரை விவசாயத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com