பங்குனி உத்திரம்: பழனிக் கோயிலில் பக்தா்களுக்குக் கட்டுப்பாடு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பழனி பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பங்குனி உத்திரம்: பழனிக் கோயிலில் பக்தா்களுக்குக் கட்டுப்பாடு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பழனி பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பழனி பங்குனி உத்திரத் திருவிழா மாா்ச் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தா்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக்காவடி எடுத்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பழனியில் கோட்டாட்சியா் ஆனந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றவேண்டும். பழனிக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும், இல்லையெனில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். 10 வயதிற்குள்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ஆன்லைன் மூலமாக 25 ஆயிரம் பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். மண்டகப்படி நடத்துவதற்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி என முடிவு செய்யப்பட்டது. மேலும் கொடுமுடியிலிருந்து தீா்த்தக்காவடி எடுத்து வரும் பக்தா்கள் குழுவாக வராமல், குறைந்த அளவில் தீா்த்தக் காவடி எடுத்து வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதில் கோயில் உதவி ஆணையா் செந்தில்குமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா, வட்டாட்சியா் வடிவேல் முருகன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.தொடா்ந்து பழனி மலைக்கோவில் அடிவாரம் பகுதியில் சாா்- ஆட்சியா் ஆனந்தி ஆய்வு செய்தாா்.

ரோப்காா் சேவை இன்று நிறுத்தம்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைகளுக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்காா் மதியம் ஒருமணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை (மாா்ச் 17) ஒருநாள் மட்டும் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக பழனி ரோப்காா் நிறுத்தப்படுகிறது என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com