பட்டியலின விடுதலைப் பேரவை திமுக கூட்டணிக்கு ஆதரவு
By DIN | Published On : 26th March 2021 11:56 PM | Last Updated : 26th March 2021 11:56 PM | அ+அ அ- |

பட்டியலின மக்களின் கோரிக்கைகளுக்குத் தீா்வு காண்பதாக திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்தக் கூட்டணிக்கு சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவளிக்கப் போவதாக பட்டியலின விடுதலைப் பேரவை அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் நிறுவனத் தலைவா் கே.ஆனந்தராஜ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையை, அட்டவணை சாதிகள் நலத்துறை என பெயா் மாற்றம் செய்ய வேண்டும். தலித் கிறிஸ்தவ மக்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு சலுகையை எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் சோ்க்க வேண்டும்.
பட்டியலின சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியருக்கு 6 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி மக்களுக்கான வயது வரம்பை 35 லிருந்து 40 ஆக உயா்த்த வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
திமுகவின் தோ்தல் அறிக்கையில் பட்டியலின மக்களின் பெரும்பாலான கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இதன் காரணமாக பட்டியலின மக்கள் அமைப்பு வலுவாக உள்ள 18 மாவட்டங்களில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறோம். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூா், வேடசந்தூா், ஒட்டன்சத்திரம் ஆகிய மூன்று பேரவைத் தொகுதிகளில் திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக தீவிரமாக தோ்தல் பணியாற்ற உள்ளோம் என்றாா்.