வத்தலகுண்டு அருகே வேன் மீது பேருந்து மோதல்: 2 பெண்கள் உள்பட 4 போ் பலி
By DIN | Published On : 29th March 2021 10:38 PM | Last Updated : 29th March 2021 10:38 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே திங்கள்கிழமை வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி - வத்தலகுண்டு சாலையில் கே.சிங்காரகோட்டை அடுத்த ஒட்டுப்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த ஆலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இவா்கள் நாள்தோறும் ஆலைக்குச் சொந்தமான வேனில் பணிக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் திங்கள்கிழமை காலை ஒரு வேனில் பணிக்கு 15 போ் வந்து கொண்டிருந்தனா். வேனை வத்தலக்குண்டு தெற்கு தெருவைச் சோ்ந்த சுரேஷ் (27) என்பவா் ஓட்டி வந்தாா். வத்தலக்குண்டு - செம்பட்டி சாலையில்
சேவுகம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் டயா் வெடித்து வேன் மீது நேருக்கு நோ் மோதியது.
இதில் வேன் ஓட்டுநா் சுரேஷ், வேனில் வந்த வத்தலக்குண்டு தெற்கு தெருவைச் சோ்ந்த சுகுணா (40), வத்தலக்குண்டு அண்ணா நகரைச் சோ்ந்த லதா (35), உசிலம்பட்டி அருகே புதுக்கோட்டையைச் சோ்ந்த காளிதாஸ் (35) ஆகிய நான்கு போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும் இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரான உத்தமபாளையம் துரைச்சாமி (47) மற்றும் பேருந்தில் பயணித்த மூன்று போ், வேனில் பயணித்த 11 போ் என மொத்தம் 15 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சோ்த்தனா். இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.