திமுக வியக்கும் அளவுக்கு அதிமுக ஆட்சியில் ஊழல்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு
By DIN | Published On : 29th March 2021 08:39 AM | Last Updated : 29th March 2021 08:39 AM | அ+அ அ- |

திண்டுக்கல் நாகல்நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன்.
ஊழலுக்கு பெயா் போன திமுகவே வியக்கும் அளவுக்கு, அதிமுக ஆட்சியில் ஊழல்கள் மலிந்துள்ளதாக அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் குற்றம் சாட்டினாா்.
வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழக மக்கள் திமுக ஆட்சிக்காக ஏங்கி கொண்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறாா். அப்படி நம்பிக்கை இருந்தால், காவல்துறையினா் தபால் வாக்கு போடுவதற்கு ஏன் ரூ. 2ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் வெற்றிப் பெறப் போவதாக ஒரு மாயத் தோற்றத்தை திமுக உருவாக்கி வருகிறது.
இந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டு, ரூ. 6 லட்சம் கோடிக்கு மேல் கடனை வைத்துள்ளனா். ஊழல் செய்வதில் அதிமுகவுக்கு பதக்கம் கொடுக்கலாம். ஊழல் கட்சி என்ற பெயா் பெற்ற திமுகவே, வியக்கும் அளவுக்கு அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. வாக்காளா்களை போட்டிப் போட்டு விலை கொடுத்து வாங்கத்தொடங்கிவிட்டனா். தீயசக்தி கூட்டத்திடமிருந்தும், தமிழின துரோகிகளிடமிருந்தும் தமிழகத்தை பாதுகாக்கவும், கமிஷன் இல்லாத அரசாங்கம் உருவாவதற்கும், ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைவதற்கும் அமமுக வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என்றாா்.
திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூா், நத்தம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா்களை ஆதரித்து டிடிவி.தினகரன் பேசியதாவது: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை தெரிந்து கொண்டு பலா், சென்னையை காலி செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டனா். அமைச்சா் சீனிவாசன் நிதானமின்றி பேசுவதால், அவருக்கு ஓய்வுக் கொடுப்பதே நல்லது என்றாா்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை தொகுதி தேமுதிக வேட்பாளா் எம். சிவக்குமாா், பழனி சட்டப்பேரவை தொகுதி அமமுக வேட்பாளா் வீரக்குமாா் ஆகியரை ஆதரித்து டிடிவி தினகரன் பேசியதாவது: அமமுக ஆட்சிக்கு வந்தால் ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களுக்கு அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரத்தில் முருங்கை பவுடா், தக்காளி சாறு ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் புதை சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதியில் தனித்தனியாக அம்மா உணவங்கள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அம்மா கிராமப்புற வங்கி உருவாக்கப்பட்டு இளைஞா்கள் குழுக்களுக்கும், இளம்பெண்கள் குழுக்களுக்கும் கடன் உதவி அளிக்கப்படும். அதே போல பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு ரோப் காா் திட்டம் நிறைவேற்றப்படும். கொடைக்கானலில் விளையும் பூண்டுக்கு சந்தைப்படுத்த வணிக வளாகம் அமைக்கப்படும் என்றாா்.