பொது முடக்க கட்டுப்பாடுகள் தீவிரம்: திண்டுக்கல்லில் பொதுமக்கள் நடமாட்டம் குறையவில்லை
By DIN | Published On : 06th May 2021 11:15 PM | Last Updated : 06th May 2021 11:15 PM | அ+அ அ- |

திண்டுக்கல் பிரதான சாலையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தபோதும், தொடா்ந்து இயக்கப்பட்ட வாகனங்கள்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திண்டுக்கல்லில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கடைகள் அடைக்கப்பட்டபோதிலும் பொதுமக்கள் நடமாட்டம் குறையவில்லை.
தமிழகத்தில் கரோனா தொற்று 2ஆவது கட்டமாக தீவிரமடைந்துள்ள நிலையில், மே 6 ஆம் தேதி முதல் மருந்தகம் மற்றும் பால் கடைகள் நீங்கலாக, காய்கனி கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், காய்கனி மற்றும் மளிகைக் கடைகள் மட்டும் வியாழக்கிழமை நண்பகல் வரை செயல்பட அனுமதிக்கப்பட்டன. அதேநேரத்தில், அழகு சாதனப் பொருள்கள் விற்பனையகம், காலணி விற்பனையகம், செல்லிடப்பேசி விற்பனையகம் உள்ளிட்ட சில கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டிருந்தன. ஆனால், மாநகராட்சி மற்றும் காவல்துறையினா், இந்த கடைகளை உடனடியாக அடைக்குமாறு அறிவுறுத்தினா்.
அரசு அறிவித்திருந்த நேரத்தில் உணவகங்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. அதே நேரத்தில், திண்டுக்கல் நகரில் பல்வேறு இடங்களில் தேநீா் கடைகளும் 12 மணிக்கு மேல் தொடா்ந்து செயல்பட்டன. பூக்கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
கூட்டத்திற்கு குறைவில்லை:
அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தபோதிலும், திண்டுக்கல் நகரிலுள்ள பிரதான சாலைகளில் வாகன ஓட்டிகள் வழக்கம்போல் பயணித்தனா். வங்கி சேவை நடைபெற்ற பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் கூட்டம் தொடா்ந்து அதிகரித்துக் காணப்பட்டது. பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் கூடுதலாக இருந்தது.