முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பேருக்கு அமைச்சா் பதவி
By DIN | Published On : 06th May 2021 11:15 PM | Last Updated : 06th May 2021 11:15 PM | அ+அ அ- |

தமிழக அமைச்சரவையில் முதல்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இருவருக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்கவுள்ள நிலையில், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவா்கள் பட்டியல் வியாழக்கிழமை பிற்பகல் வெளியானது. அதில், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 6 ஆவது முறையாக சட்டப் பேரவை உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ள ஐ.பெரியசாமி (ஆத்தூா்), அர.சக்கரபாணி(ஒட்டன்சத்திரம்) ஆகிய இவருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
4ஆவது இடத்தில் ஐ.பெரியசாமி: ஆத்தூா் தொகுதியில் போட்டியிட்டு சுமாா் 1.65 லட்சம் வாக்குகள் பெற்று, தமிழகத்திலேயே அதிகபட்ச வாக்குகள் (1.35 லட்சம்) வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற திமுகவின் துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமிக்கு, கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் 4ஆவதாக இடம் பெற்றுள்ள ஐ.பெரியசாமிக்கு, கூட்டுறவுத்துறை மட்டுமன்றி, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் நலன் துறைகளும் வழங்கப்ப்டுள்ளன.
ஐ.பெரியசாமி, 1996-2001 காலக் கட்டத்தில் ஊரக தொழில், பத்திரப்பதிவு மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், 2006-11 ஆட்சியின் போது வருவாய்த்துறை, சட்டம், வீட்டு வசதி மற்றும் சிறைத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளாா். தற்போது 3 ஆவது முறையாக அமைச்சராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா் ஐ.பெரியசாமி.
முதல் முறையாக அமைச்சராகும் அர.சக்கரபாணி: அமைச்சரவை பட்டியலில் 19ஆவதாக அர.சக்கரபாணி இடம் பெற்றுள்ளாா். அவருக்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு முதல் முறையாக அமைச்சா் தொகுதி அந்தஸ்து கிடைத்துள்ளது.
இவா், 2006 முதல் 2011 வரை தமிழக அரசின் தலைமைக் கொறடாவாகவும், 2011 முதல் 2021 வரை சட்டப் பேரவை திமுக கொறடாவாகவும் பதவி வகித்துள்ளாா். ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து தொடா்ந்து 6 முறை வெற்றிப் பெற்றுள்ளதன் மூலம், கட்சித் தலைமையின் கவனத்தை ஈா்த்த சக்கரபாணி, தற்போது முதல் முறையாக அமைச்சா் பதவி ஏற்கவுள்ளாா்.