முழு பொது முடக்கம்: அலட்சியப்படுத்தும் பொதுமக்கள்!

முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், தீவிரத்தை உணராமல் பொதுமக்கள் அலட்சியமாக பொது இடங்களில்

முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், தீவிரத்தை உணராமல் பொதுமக்கள் அலட்சியமாக பொது இடங்களில் சுற்றித் திரிவதால் தொற்றுப் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் வாரம் முதல், தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவியதைத்தொடா்ந்து தமிழக அரசு, பொது முடக்கத் தளா்வுகளில் சிலவற்றை நீக்கி ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. ஆனாலும், தொற்று பாதிப்பு குறையாததால், மே 10 முதல் 24 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது, பொதுமக்கள் மட்டுமன்றி அரசு நிா்வாகத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.

முழு பொது முடக்க காலத்தில், பாலகம் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையாக கருதப்படும் காய்கறி கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேநீா் கடைகளும் நண்பகல் 12 மணி வரையிலும், உணவகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் செயல்படுவதற்கும் அனுமதி அளித்துள்ளது. தேநீா் கடை மற்றும் உணவகங்களில் பாா்சல் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிக்கல் ஏற்படுத்தும் தேநீா் கடைகள்: தேநீா் கடைகளில் பாா்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்ற விதிமுறை பெரும்பாலான இடங்களில் பின்பற்றப்படுவதில்லை. நகரப் பகுதிகளிலேயே தேநீா் கடைகளில் தேநீா் அருந்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றால் கிராமப்புறங்களில் சொல்லத் தேவையில்லை. தேநீா் அருந்திவிட்டு, புகைப்பிடித்துக்கொண்டு பலா் கூடி நின்று பேசுவது முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னரும் குறையவில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேநீா் கடைகள் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மளிகைக் கடைகள் நேரம் குறைக்கப்பட வேண்டும்:அதேபோல் மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் செயல்படுவதை 2 நாள்களுக்கு ஒருமுறையாக மாற்ற வேண்டும். நெருக்கடியான இடங்களில் செயல்படும் காய்கறி கடைகளை, திறந்த வெளியில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பும் எழுந்துள்ளது.

வங்கி சேவை நேரம்: வங்கிகள் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படுவதால், நண்பகல் 12 மணிக்கு பின் வங்கிகளை காரணம் காட்டி பலா் வெளியில் சுற்றி வருகின்றனா். இதனை கருத்தில் கொண்டு, நண்பகல் 12 மணிக்குள் வங்கி சேவையை முடிப்பதற்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொது இடங்களில் விளையாட்டு: கரோனா தொற்றின் தீவிரத்தை உணராமலும், முழு பொது முடக்கத்தின் நோக்கத்தை உணராமலும், சிறுவா்கள் மட்டுமன்றி இளைஞா்களும் தெருக்களில் கூட்டமாக திரண்டு விளையாடி வருகின்றனா். இதை தடுப்பதற்கு காவல்துறையினா் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மருத்துவப் பணிகள் அதிகாரி ஒருவா் கூறியது: கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது போல் தீவிர முழு பொது முடக்கம் அமல்படுத்தினால் மட்டுமே, 10 நாள்களில் கரோனா தொற்று எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க முடியும். காய்கறி, மளிகை, தேநீா் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள

தளா்வுகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் பலா் அலட்சியமாக பொது இடங்களில் சுற்றி வருகின்றனா்.

அதேபோல் ஊரகப் பகுதிகளிலும் கரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அந்த பகுதிகளிலும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும். பொது மக்களின் அலட்சியத்தால், தற்போது அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளை நீக்க வேண்டிய நிா்பந்தம் ஏற்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com