கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 14th May 2021 10:44 PM | Last Updated : 14th May 2021 10:44 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றால் வெள்ளிக்கிழமை இரவு பூலத்தூா் பிரிவு அருகில் சாலையின் குறுக்கே விழுந்த மரம்.
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய பலத்த காற்றால் பெய்த மழையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல் பலத்த காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையான பூலத்தூா் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொடைக்கானலிலிருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களுக்கு காய்கனிகளை ஏற்றிச் சென்ற லாரிகள் மற்றும் தரைப் பகுதிகளிலிருந்து உணவுப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்த வாகனங்கள் மலைச்சாலையில் நீண்ட நேரம் காத்திருந்தன. இந்நிலையில் மீட்புக்குழுவினா் மற்றும் லாரி ஓட்டுநா்கள் உதவியால் மரம் அகற்றப்பட்டது. அதன் பின் போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து கொடைக்கானல் கோட்டாட்சியா் சிவக்குமாா் கூறியது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடா்ந்து கொடைக்கானலில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் தயாா் நிலையில் இருந்து வருகின்றனா். இப்பகுதியில் இயற்கை சீற்றத்தால் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.