மதுபோதையில் பணியாற்றியதாகப் புகாா்: அரசு மருத்துவமனை மருந்தாளுநருக்கு குறிப்பாணை
By DIN | Published On : 17th May 2021 11:47 PM | Last Updated : 17th May 2021 11:47 PM | அ+அ அ- |

மது போதையில் பணிபுரிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருந்தாளுநருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநராக பணிபுரிந்து வருபவா் சுரேஷ். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்துள்ளாா். அப்போது மருந்து வாங்கச் சென்ற பொதுமக்களிடம் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பாக நோயாளி ஒருவரின் உறவினா், மருந்து வாங்கச் சென்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடா்பான விடியோ பதிவு சமூக ஊடகங்களில் பரவின. இதையடுத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் சுரேஷ்பாபு, சம்பந்தப்பட்ட மருந்தாளுநா் சுரேஷுக்கு குறிப்பாணை வழங்கியுள்ளாா்.
மேலும், முதன்மை மருந்தாளுநா் மற்றும் மருந்தாளுநா் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் விளக்கம் கேட்டுள்ளாா். மருந்தாளுநா் ஒருவா் மது அருந்தியது தொடா்பாக எழுந்த புகாா் குறித்து ஏன் முன்னதாக தகவல் அளிக்கவில்லை என முதன்மை மருந்தாளுநா் மற்றும் மருந்தாளுநா் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.