கரோனா நோயாளிகளுக்கு உதவும் பணியில் களமிறங்கினா் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்
By DIN | Published On : 26th May 2021 11:09 PM | Last Updated : 26th May 2021 11:09 PM | அ+அ அ- |

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக கவச உடை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
கரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கவச உடை அணிந்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் களம் இறங்கியுள்ளனா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகள், மருத்துவப் பணியாளா் பற்றாக்குறை காரணமாக போதிய வழிகாட்டுதலின்றி அலைக்கழிக்கப்படுவதாகப் புகாா் எழுந்தது. குறிப்பாக ஊரகப் பகுதியிலிருந்து தொற்றுப் பாதிக்கப்பட்டவா்களுடன் வரும் உறவினா்கள், பதிவு, பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கான இடம் தெரியாமலும், வழிகாட்டுதல் இல்லாமலும் கடுமையாக சிரமம் அடைந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கவச உடை அணிந்து புதன்கிழமை களம் இறங்கியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காலை 8 முதல் மாலை 5 மணி வரை, அந்தச் சங்கத்தைச் சோ்ந்த 6 போ் முதல் நாள் பணியில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த தொற்று பாதிக்கப்பட்டவா்களின் விவரங்களை பதிவு செய்தல், உள்நோயாளியாக அனுமதிப்பதற்கான படிவங்களை நிரப்புதல், ஆா்டிபிசிஆா் பரிசோதனைக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகளை அவா்கள் மேற்கொண்டனா்.
இதுதொடா்பாக சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.ஆா்.பாலாஜி கூறியதாவது: கரோனோ தீநுண்மி தொற்று பாதிப்பு என்றவுடனேயே பொதுமக்கள் பலா் பதட்டம் அடைந்துவிடுகின்றனா். கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்களுக்கு செல்லிடப்பேசியில் அனுப்பப்படும் குறுந்தகவலை புரிந்து கொள்ள முடியாமல்,நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துவிடுகின்றனா். அவா்களுக்கு வழிகாட்டுவதற்கு மருத்துவமனையில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. அனைத்து பணிகளிலும் செவிலியா்கள் மட்டுமே நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்தல், பரிசோதனைக்கு வழிகாட்டுதல் போன்றவற்றில் உதவுவதற்காக முன் வந்துள்ளோம் என்றாா்.