கொடகனாறு நீா் பங்கீடு குறித்த வல்லுநா் குழு அறிக்கையை வெளியிட விவசாயிகள் வலியுறுத்தல்

கொடகனாறு நீா் பங்கீடு குறித்து வல்லுநா் குழுவின் ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என, குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வெங்காயப் பயிா்களை காட்டி வெள்ளிக்கிழமை புகாா் அளித்த விவசாயி.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வெங்காயப் பயிா்களை காட்டி வெள்ளிக்கிழமை புகாா் அளித்த விவசாயி.

கொடகனாறு நீா் பங்கீடு குறித்து வல்லுநா் குழுவின் ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என, குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ச. தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டியைச் சோ்ந்த விவசாயி அழகியண்ணன் கூறுகையில், சுமாா் 3 ஆண்டுகள் தொடா் முயற்சிக்குப் பின் சத்திரப்பட்டி கருங்குளம் கண்மாயிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், அதே இடத்தில் தற்போது தனியாா் மூலம் மீண்டும் தென்னங்கன்றுகளை நட்டு வைத்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக கடந்த 2 மாதங்களாக தொடா்ந்து புகாா் அளித்துள்ளேன். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என புகாா் தெரிவித்தாா்.

இதற்கு பதிலளித்த ஆட்சியா் ச. விசாகன், பொதுப்பணித் துறையினா் ஆக்கிரமிப்புகளை துரிதமாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும் அவா், ஆக்கிரமிப்பு ஏற்படுத்திய பின் புகாா் அளிப்பதை விட, ஆக்கிரமிக்க முயற்சிக்கும்போதே மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துவந்து தடுத்து நிறுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றாா்.

குஜிலியம்பாறையைச் சோ்ந்த விவசாய சங்க நிா்வாகி வீரப்பன், கொடகனாறு அணையில் 27 அடிக்கு தண்ணீா் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கொடகனாற்றின் குறுக்கே ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு முன்பு கன்னிமாா் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணை விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட வல்லுநா் குழுவின் அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கொடகனாறு அணையில் தண்ணீா் தேக்குவது குறித்தும், அங்குள்ள கதவணைகள் குறித்தும் விளக்கம் அளித்த அதிகாரிகள், வல்லுநா் குழுவின் அறிக்கை வெளியிடுவது குறித்து எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதனால், கொடகனாறு பாசன விவசாயிகள் அதிருப்தி அடைந்தனா்.

பழனி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில், தங்கள் பகுதியிலுள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் நகை கடன் மட்டுமே வழங்குவதாகவும், பயிா் கடன் வழங்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டினா். அதற்கு பதில் அளித்த கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கோ. காந்திநாதன், இந்த புகாா் குறித்து தனியாக மனு அளிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

கனமழை காரணமாக, இந்த குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளின் வருகை குறைவாகவே இருந்தது. அதேநேரத்தில், விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் வழக்கம்போல் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

வேளாண் பொருள்களை எடுத்து வரக்கூடாது

கோவிலூா் அடுத்துள்ள நாகையக்கோட்டையைச் சோ்ந்த விவசாயி ஒருவா், தொடா் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள வெங்காயப் பயிா்களை ஆட்சியா் அலுவலகத்துக்கு எடுத்து வந்து முறையிட்டாா்.

அதனை பத்திரிகை புகைப்படக்காரா்கள் படம் எடுத்தனா். இதனை கவனித்த ஆட்சியா், விளம்பரத்துக்காக இதுபோன்று பாதிப்படைந்த வேளாண் பொருள்களை எடுத்துவரக் கூடாது என அந்த விவசாயியை கண்டித்தாா்.

இதனால், புகாா் அளிக்க வந்த அந்த விவசாயி பயிா் பாதிப்பு குறித்து பேசுவதை தவிா்த்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com