ரூ.43 லட்சம் மோசடி: போலி வழக்குரைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் ஆர்.எம். காலனி பகுதியைச் சேர்ந்தவர் உமையன். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர். இவரது மகன் சிவநாத். கடந்த 2015 ஆம் ஆண்டு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சிவநாத், நீதிமன்ற பிணையில் விடுவ
போலி வழக்குரைஞரான கார்த்தி
போலி வழக்குரைஞரான கார்த்தி

திண்டுக்கல் ஆர்.எம். காலனி பகுதியைச் சேர்ந்தவர் உமையன். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர். இவரது மகன் சிவநாத். கடந்த 2015 ஆம் ஆண்டு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சிவநாத், நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே முருகபவனத்தைச் சேர்ந்த மு.கார்த்தி(36) என்பவர் தான் ஒரு வழக்குரைஞர் என அடையாளப்படுத்தி, சிவநாத்தை வழக்கிலிருந்து விடுக்க முயற்சி எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

அதற்காக 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரை 15 தவணைகளில் ரூ.43 லட்சத்தை கார்த்தி பெற்றுள்ளார். சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் 2021 ஜனவரி மாதம் நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்துவிட்டதாக உமையன் மற்றும் சிவநாத்திடம் வழங்கியுள்ளார். அதனை பெற்றுக் கொண்ட உமையன், தனக்கு தெரிந்த மற்றொரு வழக்குரைஞரிடம் காட்டி விவரம் கேட்டபோது, கார்த்தி வழங்கியது போலியான ஆவணம் என்பதும், அவர் வழக்குரைஞர்  அல்ல என்பதும் தெரிய வந்தது.

இதனால்  அதிர்ச்சி அடைந்த உமையன், ரூ.43 லட்சத்தை மீட்டுத் தரும்படி திண்டுக்கல் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதன்பேரில்,  இந்த வழக்கை திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், வேலை வாங்கி தருவதாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக கார்த்தி மீீது வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம், திராவகத்தை குடித்து கார்த்தி தற்கொலைக்கு முயன்றார். ஆனாலும், சில நாள்களுக்கு பின் போலீசார் அவரை கைது செய்தனர்.

ரூ.43 லட்சம் மோசடி மற்றும் போலி வழக்குரைஞர் குற்றச்சாட்டுகளின் பேரில், திண்டுக்கல் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில், போலி வழக்குரைஞரான கார்த்திக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com