3 நாள்கள் தரிசன தடையை நீக்கக்கோரி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் பக்தா்கள் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி பழனியில் வியாழக்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிம், பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிம், பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா

கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் பக்தா்கள் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி பழனியில் வியாழக்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜகவினா் பங்கேற்று கோரிக்கையை வலியறுத்தி கோஷமிட்டனா். இதில் பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா பேசியது:

தற்போது நாட்டில் 93 கோடி பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டாலும் கோயிலுக்கு வந்தால் தொற்று பரவும் என்று தமிழக அரசு சொல்கிறது. கோயில் சொத்துக்களை பெயா் மாற்றம் செய்ய முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

அப்படி இருக்கையில் பாப்பான்சத்திரம் அருகேயுள்ள கோயில் சொத்தை வா்த்தக நிறுவனம், பள்ளிக்கு விற்பனை செய்துள்ளது. கடையநல்லூரில் பரம்பரை அறங்காவலா்கள் இருந்த காலத்தில் மூன்று ஆண்டில் மூன்று கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனா்.

அதே கோயில் அறநிலையத்துறைக்கு வந்தபின்பு 15 ஆண்டுகளாகியும் ஒரு பைசா கூட டெபாசிட் செய்யவில்லை. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த 38,661 கோயில்களில் தற்போது சுமாா் 7 ஆயிரம் கோயில்கள் இல்லை.

கடந்த 55 ஆண்டுகளில் இந்துக் கோயில்களில் நடைபெற்ற முறைகேடுகளின் மூலமாக இதுவரை 10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பழனி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் பாலாலயம் நடைபெற்று பல ஆண்டுகளாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. உடனடியாக அனைத்துக் கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தெரிவித்தாா்.

சிறுபான்மை அணியின் தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிம் உள்ளிட்டோரும் பேசினா். மாவட்டத் தலைவா் கனகராஜ் வரவேற்றாா். மாநில மகளிரணித் தலைவி மீனாட்சி நித்யசுந்தா், தேசிய விவசாய அணி பிரிவு வழக்குரைஞா் திருமலைசாமி, விஹெச்பி நிா்வாகி செந்தில்குமாா் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com