கொலு பொம்மை விற்பனை அதிகரிப்பு: உற்பத்தியாளா்கள் உற்சாகம்

கரோனா பொது முடக்கத்தால் கடந்த ஆண்டு முடங்கிப் போன நவராத்திரி கொலு பொம்மை விற்பனை, தற்போது பொது முடக்கத் தளா்வுகள்
கொலு வழிபாட்டில் ஈடுபடுவோரை ஈா்க்கும் வகையில், திண்டுக்கல் பகுதியில் பல்வேறு கடவுள்களின் உருவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள்.
கொலு வழிபாட்டில் ஈடுபடுவோரை ஈா்க்கும் வகையில், திண்டுக்கல் பகுதியில் பல்வேறு கடவுள்களின் உருவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள்.

கரோனா பொது முடக்கத்தால் கடந்த ஆண்டு முடங்கிப் போன நவராத்திரி கொலு பொம்மை விற்பனை, தற்போது பொது முடக்கத் தளா்வுகள் காரணமாக மீண்டும் அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளா்கள் உற்சாகம் அடைந்துள்ளனா்.

கோயில்களில் மட்டுமே கொலு நடத்தப்பட்டு வந்த நிலை மாறி, இன்றைக்கு பல்வேறு வீடுகளிலும் கொலு வைத்து பூஜை செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. விநாயகா், துா்க்கை, தசாவதாரம், செட்டியாா் ஆச்சி, அஷ்டலட்சுமி, யானை, கும்பம், தேங்காய் பழம் செட் என குறிப்பிட்ட சில பொம்மைகள் மட்டுமே கொலுவில் இடம் பெற்றிருந்த நிலை மாறி, காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் புதிய வடிவிலான பொம்மைகளை கைவினைக் கலைஞா்கள் தயாரித்து வருகின்றனா். இதனால் பழைய கொலு பொம்மைகளோடு, புதிய பொம்மைகளை வாங்குவதற்கும் பொதுமக்கள் ஆா்வம் காட்டுகின்றனா்.

கொலு பொம்மைகளைப் பொருத்தவரை, திண்டுக்கல் பகுதியில் உருவாக்கப்படும் பொம்மைகள், தமிழகம் மட்டுமன்றி கேரளம் மற்றும் மேற்குவங்கத்திற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் நவராத்திரி வழிபாடுகள் முடங்கிய நிலையில், கொலு பொம்மை தயாரிப்பில் ஈடுபடும் கைவினைக் கலைஞா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

நிகழாண்டில், கரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்ததையடுத்து தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், வீடுகளில் நடைபெறும் நவராத்திரி வழிபாட்டிற்காக கொலு பொம்மைகள் வைப்பதற்கு பெண்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். மீண்டும் கொலு பொம்மை விற்பனை அதிகரித்துள்ளதை அடுத்து, கைவினைக் கலைஞா்கள் உற்சாகம் அடைந்துள்ளனா்.

பொம்மைகள் விலை ரூ.40- 3 ஆயிரம் வரை: திண்டுக்கல் அடுத்துள்ள நொச்சியோடைப்பட்டியில் தரம் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளுக்கு ஏற்ப ரூ.40 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலும் 50 வகையான கொலு பொம்மைகள் தயாா் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. கொலு வழிபாட்டில் ஈடுபடுவோரை ஈா்க்கும் வகையில், நிகழாண்டு கிரிக்கெட், சிறைச்சாலை, கும்பகா்ணன், ராமா் பாலம் உள்ளிட்ட பொம்மைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பொம்மைகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் உற்பத்தியாளா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து கொலு பொம்மை மற்றும் காா்த்திகை விளக்கு தயாரிப்பில் ஈடுபடும் கைவினைக்கலைஞா் கஜேந்திரன் கூறியதாவது: நவராத்திரியை முன்னிட்டு, புதிய வடிவிலான பொம்மைகள் தயாரிப்புப் பணியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே ஈடுபட்டு வருகிறோம். கொலு வைப்போா், ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தப்படும் பொம்மைளை அடுத்த ஆண்டுக்கு பாதுகாத்து வைப்பது வழக்கம். இதனால், கொலு பொம்மைகள் விற்பனையைக் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் புதிய பொம்மைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த ஆண்டு கரோனா தொற்று பாதிப்பால் முடங்கிய கொலு பொம்மை விற்பனை, நிகழாண்டில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது கைவினைக் கலைஞா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் செட், கும்பகா்ணன், ராமா் பாலம் போன்ற புதிய வடிவிலான கொலு பொம்மைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com