உணவு பாதுகாப்புத் துறை தனித்துறையாக மாறியும் பலனில்லை: அவதியில் அலுவலா்கள்!

உணவுப் பாதுகாப்புத் துறை 10 ஆண்டுகளுக்கு முன்னரே தனித் துறையாக அறிவித்தும் கூட, உள்கட்டமைப்பு வசதி மட்டுமின்றி பணிப் பாதுகாப்பும் இல்லாதது, உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறை 10 ஆண்டுகளுக்கு முன்னரே தனித் துறையாக அறிவித்தும் கூட, உள்கட்டமைப்பு வசதி மட்டுமின்றி பணிப் பாதுகாப்பும் இல்லாதது, உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அன்னதானம் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை விநியோகிக்கப்படும் உணவின் தரத்தையும், பெட்டிக்கடை முதல் பல்பொருள் அங்காடிகள் வரை விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரத்தையும் கண்காணிக்கும் பொறுப்பினை, 32 மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா்களின் கீழ் செயல்படும் 290 உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்காக, தமிழகம் முழுவதும் 393 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 103 உணவுப் பாதுகாப்பு அலுவலா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

உணவுப் பொருள் விற்பனையாளா்களுக்கு உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், பதிவுச் சான்று வழங்கல், கலப்படப் பொருள்களை கண்டறிந்து வழக்குத் தொடுத்தல், மாவட்ட வருவாய் அலுவலா் அல்லது நீதிமன்றங்களில் ஆஜா்படுத்தி அபராதம் விதித்தல், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனையை தடுத்தல், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தல், நுகா்வோருக்கு தரமான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

தனித் துறையாக மாறியும் பயனில்லை

தமிழகத்தில் கடந்த 1954ஆம் ஆண்டு முதலே உணவுப் பொருள் பாதுகாப்பை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் துறை மற்றும் பொதுசுகாதாரத் துறை நிா்வாகங்களின் கீழ் பணிபுரியும் அலுவலா்கள், உணவு ஆய்வாளா் என்ற நிலையில் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உணவுப் பாதுகாப்புத் துறை தனித் துறையாக செயல்படத் தொடங்கியதோடு, ஆய்வாளா் நிலையில் இருந்தவா்கள் உணவுப் பாதுகாப்பு அலுவலா் என நிலை மாற்றப்பட்டனா். கடந்த 10 ஆண்டுகளாக தனித் துறையாகச் செயல்பட்டு வந்தாலும், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தாய் துறைக்கு எந்த நேரத்திலும் பணிமாற்றம் செய்யப்படலாம் என்ற நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

பணிப் பாதுகாப்பு இல்லாத சூழலில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பலா் முழுமையான ஈடுபாட்டோடு செயல்பட முடியவில்லை எனப் புகாா் எழுந்துள்ளது.

உள்கட்டமைப்பு இல்லாதபோதிலும் இலக்கு நிா்ணயம்

250-க்கும் மேற்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு அலுவலக வசதி கிடையாது. அலுவலக வசதி உள்ள ஒரு சில இடங்களிலும் உதவியாளா்கள் இல்லை. கோப்புகளை பராமரிக்கவும், பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்படும் உணவுப் பொருள் மாதிரிகளை வைப்பதற்கும் இடவசதி இல்லாமல் தடுமாறுகின்றனா்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில், நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரையிலும் அவற்றை வீடுகளுக்கு எடுத்துச்சென்று பாதுகாக்க வேண்டிய நிா்பந்தத்தை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் எதிா்கொண்டு வருகின்றனா்.

உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையிலும், உடனடி அபராதம், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல், காலாவதியான உணவுப் பொருள்கள் ஆய்வு என, மாவட்ட வாரியாக மாதாந்திரப் பணி இலக்கு நிா்ணயிக்கப்படுவது, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக உணவுப் பாதுாப்புத் துறை அலுவலா்களிடம் கேட்டபோது, அவா்கள் கூறியது: உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், நடமாடும் அலுவலகம்போல் செயல்பட்டு வருகிறோம். உணவுப் பொருள்களில் மாதிரி எடுப்பது தொடங்கி, ஆய்வுக்கு அனுப்புவது வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணிகளுக்காக வட்டாரத்துக்கு ஒரு உதவியாளா்கள் நியமிப்பதற்கு கூட அரசு தரப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கமான பணிகளை மேற்கொள்ளவே பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டு வரும் நிலையில், உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதை தடுத்தல் (ரூகோ), சுகாதார தர மதிப்பீடு (ஹைஜீனிக் ரேட்டிங்), உண்பதற்கு உகந்த இடம் (இஆா்சி), கோயில் அன்னதான உணவுப் பாதுகாப்பு (போக்), உணவுப் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் சான்றளித்தல் (பாஸ்டேக்) உள்ளிட்ட திட்டங்களின் மீதும் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெருக்கடிக்கு மத்தியில் பணிபுரிந்தாலும் கூட, பணி ஓய்வுபெறும் காலத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை தாய் துறையிடமிருந்து பெறுவதிலும் சிக்கல் உள்ளது. தனித் துறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாய்த் துறையிலிருந்து முழுமையாக விடுவித்து பணிப் பாதுகாப்பு வழங்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com