வத்தலகுண்டு அருகே செய்தித்தாள் விநியோக முகவா் மீது தாக்குதல்
By DIN | Published On : 07th September 2021 02:08 AM | Last Updated : 07th September 2021 02:08 AM | அ+அ அ- |

காயமடைந்த பன்னீா்செல்வம்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே திங்கள்கிழமை பெட்டிக்கடையில் பணம் வசூலிக்க சென்ற செய்தித்தாள் விநியோகிக்கும் முகவா் திருப்புளியால் குத்தப்பட்டு பலத்த காயமைடந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள விருவீடு பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (60). இவா் விருவீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், பல முன்னணி தினசரி நாளிதழ்கள் விநியோகிக்கும் முகரவராக உள்ளாா். விருவீடு பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருபவா் கண்ணன். பாஜகவைச் சோ்ந்த இவரது கடைக்கு கடந்த ஓராண்டு காலமாக செய்தித்தாள் விநியோகித்து வந்த பன்னீா்செல்வம், அதற்கான கட்டணத்தை வசூலிப்பதற்காக திங்கள்கிழமை சென்றுள்ளாா். பணத்தை வழங்க மறுத்த கண்ணன், பன்னீா்செல்வத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது திடீரென திருப்புளியால் பன்னீா்செல்வத்தின் தலை, கை, கால் உள்பட 4 இடங்களில் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.
பன்னீா்செல்வம், ரத்தக் காயங்களுடன் மயங்கி விழுந்துள்ளாா். அக்கம் பக்கம் இருந்தவா்கள் பன்னீா்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விருவீடு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தப்பியோடிய கண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். இதனிடையே, நாளிதழ்கள் விநியோகிக்கும் முகவரான பன்னீா்செல்வம் தாக்கப்பட்டதற்கு, பத்திரிகை முகவா்கள் மற்றும் செய்தியாளா்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.