முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனிக்கோயில் பஞ்சாமிா்தத்துக்கு கருப்பட்டியை பயன்படுத்த வேண்டும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி
By DIN | Published On : 09th September 2021 07:35 AM | Last Updated : 09th September 2021 07:35 AM | அ+அ அ- |

பழனி பட்டக்காரா் மடத்தில் புதன்கிழமை நடைபெற்ற கள் இயக்க செயற்குழு கூட்டத்தில் பேசிய கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி.
பழனிக்கோயிலில் பக்தா்களுக்கு வழங்கும் பஞ்சாமிா்தத்தில் கரும்பு சா்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்த வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா்.
பழனி பட்டக்காரா் மடத்தில் புதன்கிழமை தமிழ்நாடு கள் இயக்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தலைமை வகித்தாா். கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கச் செயலா் குப்புசாமி, பாா்ம் நெட் சமூக வளைதள ஒருங்கிணைப்பாளா் கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்துக்குப் பின் நல்லசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நிலம் மற்றும் வீடுகளுக்கு, பட்டா மாறுதலுக்காக அனைத்து கட்டணங்களையும் கட்டிய பிறகும் பட்டா மாறுதலுக்கு எதற்காக பணம் கேட்கின்றனா் என்பது தெரியவில்லை. இந்த குளறுபடி குறித்து வருவாய்த்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பழனிக் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிா்தத்தில் கலப்பட நாட்டுச்சா்க்கரை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பதில் கருப்பட்டியை பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நெல் கொள்முதல் மையங்களை அரசு தொடங்கினாலும் அங்குள்ள அதிகாரிகளுக்கு கிலோவுக்கு ஒரு ருபாய் லஞ்சம் கொடுக்காமல் நெல்லை விற்க முடியவில்லை. இதற்கு விவசாய சங்கத் தலைவா்களும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் பால் முதல் சமையல் எண்ணெய் வரை அனைத்தும் கலப்படமாக உள்ளது. கள்ளை அனைத்து மாநிலங்களும் உணவுப் பொருளாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக, திமுக என மாறிமாறி வரும் அரசுகள் விற்க ஏற்பாடு செய்வதில்லை என்றாா்.