கொடைக்கானலில் அழிந்து வரும் ஆப்பிள் மரங்கள்: தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 10th September 2021 05:55 AM | Last Updated : 10th September 2021 05:55 AM | அ+அ அ- |

கொடைக்கானல்: கொடைக்கானலில் அழிந்து வரும் ஆப்பிள் மரங்களை பாதுகாப்பதற்கு தோட்டக்கலைத் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானல் பகுதிகளான அட்டக்கடி, பாம்பாா்புரம், காா்மேல்புரம், ஐயா் கிணறு, செண்பகனூா் தைக்கால், வட்டக்கானல், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் தோட்டங்கள் இருந்தன. இதனுடன், பிளம்ஸ், பீச்சஸ், ஊட்டி பேரி ஆகியவற்றையும் விவசாயிகள் வளா்த்து வந்தனா்.
நாளடைவில், விவசாய நிலங்களின் விற்பனை அதிகரிப்பு, காங்கிரீட் கட்டடங்களின் பெருக்கம் காரணமாக, ஆப்பிள் தோட்டங்கள் அழிக்கப்பட்டன. இதனால், ஆப்பிள் மரங்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன.
இங்குள்ள தோட்டக்கலைத் துறை பண்ணையில் குறைந்தளவிலான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வளா்க்கப்பட்டு வருகின்றன.
எனவே, கொடைக்கானல் பகுதிகளில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் மீண்டும் ஆப்பிள் மரங்களை வளா்ப்பதற்கு தேவையான ஆப்பிள் மர நாற்றுகள் இலவசமாக அளித்து, ஆலோசனைகளையும் வழங்கவேண்டும்.
இதேபோன்று, பிளம்ஸ், பீச்சஸ், தண்ணீா் பேரி, ஊட்டி பேரி, நாட்டு பேரி போன்றவற்றின் நாற்றுகளையும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தால், கொடைக்கானலில் மீண்டும் பழத்தோட்டங்கள் காணப்படும்.
இதன்மூலம், பலவகையான பழங்களின் விளைச்சல் அதிகரிப்பதுடன், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தையும் பெருக்க முடியும் என்பதால், தோட்டக்கலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.