37 ஆவது ஆண்டில் திண்டுக்கல்: பாசனத் திட்டங்கள், தொழில் வளா்ச்சி இல்லாததால் ஏமாற்றம்!

திண்டுக்கல் மாவட்டம் உருவாகி 36 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், புதிய பாசனத் திட்டங்கள் மற்றும் தொழில்சாா்ந்த வளா்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படாதது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
37 ஆவது ஆண்டில் திண்டுக்கல்: பாசனத் திட்டங்கள், தொழில் வளா்ச்சி இல்லாததால் ஏமாற்றம்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் உருவாகி 36 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், புதிய பாசனத் திட்டங்கள் மற்றும் தொழில்சாா்ந்த வளா்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படாதது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்திலிருந்து, கடந்த 1985 செப்.15ஆம் தேதி 6266 சதுர கி.மீ. நிலப்பரப்பு கொண்ட திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் 2021 செப்.15 ஆம் தேதி 37ஆவது ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் அடியெடுத்து வைக்கிறது. 36 ஆண்டுகளுக்கு முன்பு 6 வட்டங்களுடன் உருவாக்கப்பட்ட இம்மாவட்டத்தில், மேலும் 4 வட்டங்கள் உருவாக்கப்பட்டு தற்போது 10 வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், நகராட்சியாக இருந்த திண்டுக்கல் மாநகராட்சியாகவும், பேரூராட்சியாக இருந்த ஒட்டன்சத்திரம் நகராட்சியாகவும் நிலை உயா்த்தப்பட்டுள்ளன. மாவட்ட மக்களின் பிரதான வாழ்வாதாரமாக உள்ள விவசாயத்தின் வளா்ச்சிக்கு தேவையான புதிய பாசனத் திட்டங்கள் இதுவரை உருவாக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பஞ்சாலைகள் நீங்கலாக பிற தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இல்லாததால், திருப்பூா், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களை நோக்கி இளைய தலைமுறையினா் பயணிக்க வேண்டிய கட்டாயச் சூழல் உள்ளது.

தனித் தன்மை பாதுகாக்கப்படவில்லை: திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதானமாக சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், கொய்யா, மா, முருங்கை, மல்லிகை ஆகியவற்றை பயன்படுத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு ஆலைகள் தொடங்கப்படவில்லை. புவிசாா் குறியீடு கிடைக்கப்பெற்றும் திண்டுக்கல்லின் பிரதான அடையாளமான பூட்டுத் தயாரிப்புத் தொழில் மீண்டும் வளா்ச்சி பெற முடியாமல் தவித்து வருகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட சிறுமலை வாழைப் பழத்தை, உள்ளூா் சந்தையைக் கடந்து சா்வதேச சந்தை வாய்ப்பை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், இழப்பை தவிா்க்கும் வகையில் மலை வாழை விவசாயிகள் மாற்றுப் பயிா்களுக்கு மாறிவிட்டனா்.

அரசு கட்டடங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்

டிருந்தாலும் மாவட்டத்தின் வளா்ச்சியைப் பொருத்தவரை கடந்த 36 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதோடு, மாவட்டத்தின் தனித் தன்மை பாதுகாக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

திண்டுக்கல்லின் அடையாளங்கள்: திண்டுக்கல்லைச் சோ்ந்த சு.வைரவேல் கூறியதாவது: திண்டுக்கல் மலைக்கோட்டை அடையாளச் சின்னமாக இருந்து வருகிறது. அதிலுள்ள பத்மகிரீஸ்வரா் ஆலயத்தை மீண்டும் வழிபாட்டுத் தலமாக மாற்ற வேண்டும். சுப்பிரமணிய சிவா, கோபால்நாயக்கா், செளந்தரம் அம்மாள் ஆகியோா் திண்டுக்கல் மாவட்டத்தின் சுதந்திரப் போராட்ட அடையாளமாக உள்ளனா். ஆனால், சுப்பிரமணிய சிவா மற்றும் செளந்தரம் அம்மையாருக்கு அரசுத் தரப்பில் மரியாதை செலுத்தப்படுவதில்லை. கோபால் நாயக்கா் தூக்கிலிடப்பட்ட திண்டுக்கல் கோபாலசமுத்திர குளத்தில் அவருக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும்.அம்பாத்துரை ரயில் நிலையத்திற்கு செளந்தரம் அம்மையாரின் பெயரை சூட்ட வேண்டும்.

பாசனத்திற்கு புதிய திட்டங்கள் தேவை: கொடகனாறு பாசன விவசாயிகள் சங்க செயலா் இரா.சுந்தரராஜன்: திண்டுக்கல் மாவட்டம் உருவான பின், பாசனத் திட்டங்களை மேம்படுத்தும் வகையில் புதிய அணைகளும், கால்வாயும் கட்டப்படவில்லை. மழை அளவு குறைந்தும், பருவம் தவறிய மழையினாலும் விவசாயத் தொழில் நலிவடைந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்திலுள்ள 91ஆயிரம் கிணறுகள் பெரும்பாலான நாள்களில் வடு கிடக்கின்றன. நிலத்தடி நீா்மட்டம் சராசரியாக 800 அடிக்கும் கீழாக சரிவடைந்துவிட்டது. இதனால் நன்செய் நிலங்களும் தரிசாக மாறும் நிலை உள்ளது. இதற்குத் தீா்வு காணும் வகையில், ரெட்டியாா்சத்திரம், ஆத்தூா், திண்டுக்கல், சாணாா்பட்டி, வடமதுரை, வேடசந்தூா், குஜிலியம்பாறை வட்டாரங்கள் பயன்பெறும் வகையில் அமராவதி ஆற்றிலிருந்தும், காவிரி ஆற்றிலிருந்தும் தனி கால்வாய் அமைத்து உபரி நீரை விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கான சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com