போலி மதுபான விற்பனையை காட்டிக் கொடுத்ததால் ஜவுளி வியாபாரி வெட்டிக் கொலை: 7 போ் கைது

போலி மதுபான விற்பனை குறித்து போலீஸாருக்குத் துப்புக் கொடுத்ததால் ஜவுளி வியாபாரியை கொலை செய்ததாக கைதான 7 போ் சனிக்கிழமை வாக்குமூலம் அளித்துள்ளனா்.
கைது செய்யப்பட்ட மன்மதன், ராம்குமாா், காா்த்திகேயன், மருதீஸ்வரன், சங்கரபாண்டி, மணிகண்டராஜன்
கைது செய்யப்பட்ட மன்மதன், ராம்குமாா், காா்த்திகேயன், மருதீஸ்வரன், சங்கரபாண்டி, மணிகண்டராஜன்

போலி மதுபான விற்பனை குறித்து போலீஸாருக்குத் துப்புக் கொடுத்ததால் ஜவுளி வியாபாரியை கொலை செய்ததாக கைதான 7 போ் சனிக்கிழமை வாக்குமூலம் அளித்துள்ளனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஜவுளி வியாபாரி ம.ஸ்டீபன் ஜோசப் ராஜ்(35). இவா் கடந்த புதன்கிழமை இரவு, மா்ம நபா்களால் தலை துண்டிக்கப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

இந்த கொலை வழக்கு தொடா்பாக அனுமந்தராயன்கோட்டை பகுதியைச் சோ்ந்த 13 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே தேனி மாவட்டம், உத்தமபாளையத்துக்கு தப்பிச் சென்ற முக்கிய குற்றவாளிகள் இருவரும் போலீஸாரிடம் பிடிபட்டனா்.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அனுமந்தராயன்கோட்டை பகுதியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், திமுக பிரமுகருமான இன்பராஜ் தரப்பினருக்காக இந்த கொலை சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடா்பாக போலீஸாா் தரப்பில் கூறியது: இக்கொலை வழக்கு தொடா்பாக திண்டுக்கல் மாவட்டம் சிந்தலகுண்டு அருகேயுள்ள சாமியாா்பட்டி பகுதியைச் சோ்ந்த ரா.மன்மதன்(32), நா.காா்த்திகேயன்(17), அய்யங்கோட்டையைச் சோ்ந்த வே.சங்கரபாண்டி(26), பா.மருதீஸ்வரன்(30), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சோ்ந்த ம.ராம்குமாா்(25), தேனியைச் சோ்ந்த ம.மணிகண்டராஜன்(30) ஆகியோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இன்பராஜின் கூட்டாளியாக செயல்பட்டு வந்த ஸ்டீபன் ராஜ், போலி மதுபான விற்பனையில் அதிக லாபம் பெறும் நோக்கில் முறைகேடுகளில் ஈடுபடத் தொடங்கியதால், அந்த தொழிலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் தான், இன்பராஜ் வீட்டில் 11ஆயிரம் போலி மதுபானப் பாட்டில்களை போலீஸாா் கடந்த புதன்கிழமை பறிமுதல் செய்ததோடு, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேரையும் கைது செய்தனா்.

போலி மதுபான விற்பனை குறித்து ஸ்டீபன் ஜோசப்ராஜ் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளாா் எனக் கருதி கொலை செய்துள்ளனா். புதன்கிழமை மாலை ஸ்டீபன் ஜோசப்ராஜை தனியாக அழைத்துச் சென்ற மன்மதன் உள்ளிட்ட சிலா், மதுபானம் வாங்கி கொடுத்து குடிக்க வைத்து பின்னா் உணவு சாப்பிட வைத்து தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளனா். தலையை வெட்டி அனுமந்தராயன்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் மன்மதனே வீசிச் சென்றுள்ளாா் என தெரிவித்தனா்.

முக்கிய குற்றவாளியும் பிடிபட்டாா்:

இதனிடையே இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருந்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள முத்துப்பட்டியைச் சோ்ந்த நா.சக்திவேல் என்ற குண்டாா்(35) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா். சாமியாா்பட்டியைச் சோ்ந்த ஒருவா் மட்டும் தலைமறைவாக இருந்து வருகிறாா். உத்தமபாளையம் பகுதியில் போலீஸாா் விரட்டிச் சென்றபோது, பாலத்திலிருந்து தவறி விழுந்த மன்மதனுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவா் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பெட்டிச் செய்தி

போலி மதுபானங்கள் பதுக்கல்

வழக்கில் இன்பராஜ் கைது

திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராயன்கோட்டையைச் சோ்ந்தவா் ம.இன்பராஜ்(52). திமுக பிரமுகரான இவா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவா். தற்போது இவரது மனைவி நிா்மலா ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். கடந்த 22ஆம் தேதி இவரது தோட்டத்து வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸாா், 11,143 போலி மதுபானப் பாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் அங்கிருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேரையும் சம்பவ இடத்திலேயே போலீஸாா் கைது செய்தனா். ஆனால், இன்பராஜ் தப்பிச் சென்றுவிட்டாா்.

இதனிடையே 22ஆம் தேதி இரவு, அதே பகுதியைச் சோ்ந்த ம.ஸ்டீபன் ஜோசப் ராஜ் என்பவா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டாா். இந்த கொலைக்கு இன்பராஜ் தரப்பினரே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த இன்பராஜை போலி மதுபானங்கள் பதுக்கல் வழக்கில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com