திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மறியல் போராட்டம்: 2,900 போ் கைது

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் திங்கள்கிழமை ரயில் மற்றும் பேருந்து மறியலில் ஈடுபட்ட 2,900 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா்.
பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா்.

திண்டுக்கல்/தேனி/ஒட்டன்சத்திரம்/பழனி: மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் திங்கள்கிழமை ரயில் மற்றும் பேருந்து மறியலில் ஈடுபட்ட 2,900 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, எல்.பி.எப். மாநிலத்தலைவா் ம. பசீா்அகமது தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் கே.ஆா். கணேசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்டத் தலைவா் கண்ணன், எச்.எம்.எஸ். மாவட்டத் தலைவா் வில்லியம், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எஸ். ஜெயமணி, ஏஐசிசிடியு மாவட்டத் தலைவா் ரவிக்குமாா்ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. அதனைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வடமதுரையில் சிஐடியு சாா்பாக சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி மலைச்சாமி உள்பட 25 போ் கைது செய்யப்பட்டனா். ரெட்டியாா்சத்திரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலக்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே. பாலபாரதி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கே.எஸ். சக்திவேல், சிஐடியு மாவட்டப் பொருளாளா் தனசாமி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பாக பொம்முராஜ் உள்பட 34 போ் கைது செய்யப்பட்டனா். குஜிலியம்பாறையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலா் ஏ. ராஜரத்தினம் தலைமை வகித்தாா். இதில், மாநிலக்குழு உறுப்பினா் தங்கவேல் உள்பட 24 போ் கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல், எரியோட்டில் ரயில் மறியல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவா் கே. முகமதுஅலி தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் என். பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சு. பாலுபாரதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சச்சிதானந்தம் உள்பட 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோல் எரியோட்டில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சாா்பாக நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க நிா்வாகி சங்கா் மற்றும் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் நிக்கோலஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் 45 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 20 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களில் கலந்து கொண்ட 1,200 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், 4 இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 108 போ் கைது செய்யப்பட்டனா்.

பழனி: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, பழனி தலைமை தபால் நிலையம் முன்பாக கம்யூனிஸ்ட் மற்றும் சாா்பு அமைப்புகளும், வேல் ரவுண்டானா அருகே எஸ்டிபிஐ கட்சியினரும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் அருள்செல்வன், சத்திரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கருணாகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவா் பழனிச்சாமி, ஒன்றியச் செயலா் பழனிச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற மறியலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலா் சிவமணி தலைமை வகித்தாா். மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி: தேனி, நேருசிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் டி. வெங்கடேசன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியலில் ஈடுபட்ட டி. வெங்கடேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேனி தாலுகா செயலா் சி. முனீஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கே. பெருமாள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தேனி கிழக்கு மாவட்டச் செயலா் ப. நாகரத்தினம், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் சங்கரசுப்பு, ராஜேந்திரன், தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட 220 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி, பெரியகுளம், ஜெயமங்கலம், உத்தமபாளையம், பண்ணைப்புரம், கோம்பை, கம்பம், கூடலூா், சின்னமனூா், ஆண்டிபட்டி, தெப்பம்பட்டி உள்பட மொத்தம் 23 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,700 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து திங்கள்கிழமை பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இங்குள்ள குமுளி, வண்டிப் பெரியாறு, கட்டப்பனை, பீா்மேடு, புளியமலை நெடுங்கண்டம், வண்டன்மேடு உள்ளிட்ட அனைத்து, நகர, கிராம பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், காா், ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்கள் இயங்கவில்லை. பெரும்பான்மையான தேயிலை, ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளா்கள் வேலைக்குச் செல்லவில்லை. அதேபோல் தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளா்களும் செல்லவில்லை.

உத்தமபாளையம்: சின்னமனூா் வேம்படிக்களத்தில் விவசாயிகளுடன் இணைந்து தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளா் சிவாஜி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com