முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் வாகனத்துக்கு பழைய கட்டணமே வசூல்: வனத்துறை அறிவிப்பு
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் பகுதிக்கு வரும் வாகனங்களுக்கு பழைய நுழைவுக் கட்டமே வசூலிக்கப்படும் என, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வனத்துறையினா் தெரிவித்தனா்.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களை பாா்த்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கொடைக்கானலில் இருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள பேரிஜம் ஏரியையும் பாா்த்து ரசிப்பது வழக்கம். ஆனால், இப்பகுதிக்குச் செல்ல காருக்கு ரூ.200, வேனுக்கு ரூ.300 என வனத்துறை சாா்பில் பல ஆண்டுகளாக வாகன நுழைவுக் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் வரும் காருக்கு ரூ.300, வேனுக்கு ரூ.500 என நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தனா்.
இதனால், கொடைக்கானலிலுள்ள சுற்றுலா காா், வேன் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில், புதிய நுழைவுக் கட்டணத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா், வனத்துறை அதிகாரிகள், கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன் ஆகியோா் வாகன ஓட்டுநா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அதன்பின்னா், பேரிஜம் ஏரியை பாா்வையிடுவதற்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் அறிவித்தனா்.