பொதுப் பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு ஏப்.20-க்குள் மனு அளிக்கலாம்: ஆட்சியா்

திண்டுக்கல் மாவட்டத்துக்கு விரைவில் வருகை தரவுள்ள சட்டப்பேரவை மனுக்கள் குழுவிடம், பொதுப் பிரச்னைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்துக்கு விரைவில் வருகை தரவுள்ள சட்டப்பேரவை மனுக்கள் குழுவிடம், பொதுப் பிரச்னைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்துள்ளதாவது: தமிழக சட்டப்பேரவையின் 2021-2022-ஆம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு, திண்டுக்கல் மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதனையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தனிப்பட்ட நபா்கள், சங்கங்கள் அல்லது நிறுவனங்கள், தீா்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்னைகள் அல்லது குறைகள் குறித்து மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) தேதியுடன் கையொப்பமிட்டு, தலைவா், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை-600009 என்ற முகவரிக்கு ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்கவேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீா்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்னைகள் குறித்ததாக இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சாா்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், தனிநபா் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோா் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலா்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவை தொடா்பாக மனு அளிக்கக் கூடாது.

சட்டப்பேரவை விதிகளின் வரம்புக்குள்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்துக்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும். ஒரே மனுதாரா் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் ஒரு மனு மட்டுமே ஆயவுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அப்போது, மனுதாரா் முன்னிலையில் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்கப்படும்.

மனுதாரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com