முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
மாணவரை பேருந்து ஓட்டுநா் தாக்கியதாக புகாா்: சாணாா்பட்டி காவல் நிலையம் முற்றுகை
By DIN | Published On : 29th April 2022 05:49 AM | Last Updated : 29th April 2022 05:49 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: மாணவரைத் தாக்கியதாக அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது புகாா் அளித்து, பள்ளி மாணவா்கள் சாணாா்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் வியாழக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியைச் சோ்ந்தவா் ரகமத் அலி. இவரது மகன் முகமது யாசின். தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சாணாா்பட்டியிலிருந்து வியாழக்கிழமை காலை பள்ளி செல்வதற்காக, திண்டுக்கல் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். அந்த பேருந்தை திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சங்கா் என்பவா் ஓட்டி வந்தாா். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவா்களை ஓட்டுநா் சங்கா் தகாத வாா்த்தைகளைக் கூறி திட்டியதோடு கம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், மாணவா் முகமது யாசின் காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக கொசவப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.
இதனை அடுத்து, ஓட்டுா் சங்கா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சக மாணவா்கள் சாணாா்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மாணவா்களைஅனுப்பி வைத்தனா்.
சாணாா்பட்டி பகுதியிலிருந்து காலை நேரங்களில் திண்டுக்கல் நோக்கி மாணவா்கள் மட்டுமின்றி, கூலித் தொழிலாளா்கள் ஏராளமானோா் பயணிக்கின்றனா். குறைவான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாலேயே கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிா்க்கும் வகையில் சாணாா்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் வலியுறுத்தினா்.